×

விமான பயணிகளுக்கு மத்திய அரசு கடும் கெடுபிடி புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

புதுடெல்லி: இரண்டு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்க உள்ள உள்நாட்டு விமான சேவைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஆரோக்கிய சேது ஆப் கட்டாயம், சமூக இடைவெளி கடைபிடித்தல், ஒரே ஒரு பை மட்டும் கொண்டு வருதல் என பயணிகளுக்கு பல வகையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பின் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையமும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகமும் நேற்று வெளியிட்டது. இதில் பயணிகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது:

* விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த தங்கள் மொபைலில் ஆரோக்கிய சேது ஆப் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். இது, விமான நிலையத்திற்குள் நுழையும் முன்பாக, மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் அல்லது விமான ஊழியர்களால் சரிபார்க்கப்படும். ஆப் இல்லாதவர்கள் சுய ஒப்புதல் சான்று அளித்தால் போதும்.14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* விமான நிலைய நுழைவாயிலுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் தெர்மல் ஸ்கேனிங் வழியாக பயணிகள் நடந்து செல்ல வேண்டியது கட்டாயமாகும். இதன் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படும்.
* நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரும் பயணிகளுக்கும், கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படாது. முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விமான பயணத்தை தவிர்ப்பது நல்லது.
* விமான புறப்பாடு பகுதியில் பயணிகளின் உடைமைகளை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய பராமரிப்பாளர்கள் செய்திருக்க வேண்டும்
* பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வர வேண்டும். அதிகபட்சம் 4 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே பயணிகள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
* கார் பார்க்கிங் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் டிராபிக் ஜாம் ஏற்படாமல் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கண்காணிக்க வேண்டும்.
* வருகை பகுதியில் பயணிகளுக்கு டிராலிகள் தருவது தவிர்க்கப்பட வேண்டும். அத்தியாவசியமாக தேவைப்படுவோருக்கு மட்டும் டிராலிகளை தர வேண்டும்.
* விமான நிலைய நுழைவுப்பகுதி தரை விரிப்புகள் சோடியம் ஹைட்ரோகுளோரைடு சொலிசன் கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பயணிகளின் காலணிகள் கிருமிநாசினி செய்யப்படும்.
* அனைத்து உணவு, குளிர்பான விற்பனையகங்கள் முழுமையாக நோய் தடுப்பு நடவடிக்கையும் செயல்பட வேண்டும்.
* விமானத்திற்குள் பயணிகளை அனுமதிக்கும்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். விமானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, சீட் நம்பர் படி அவர்களை வெளியேறச் செய்ய வேண்டும்.
* விமான நிலையத்திற்குள் எங்கும் பத்திரிகைகள், மாத இதழ்கள் தரப்படக்கூடாது.
* விமான ஊழியர்கள் முழு பாதுகாப்பு உடை அணிந்திருக்க வேண்டும்.
* பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
* பயணிகள் ஒரே ஒரு பை மட்டுமே கொண்டு வர வேண்டும். விமானத்தில் உணவு வழங்கப்படாது. தண்ணீர் மட்டுமே தரப்படும்.
* அனைத்து நுழைவாயில்களிலும் பயணிகளுக்கு சானிடைசர்கள் எளிதில் கிடைக்கும் படி வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு தடை: விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் தாறுமாறாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுதொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: 40 நிமிடம் முதல் 210 நிமிடம் வரை பயண நேரத்தின் அடிப்படையில் 7 பிரிவாக பிரித்து டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக டெல்லியில் இருந்து மும்பைக்கான விமான கட்டணம் குறைந்தது ரூ. 3,500ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரமாக இருக்கும்.

அடுத்து வரும் 3 மாதங்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 24ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். விமானத்தில் 40 சதவீத சீட்கள் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சத்திற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும். திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகிறது.

அதேபோல வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட உள்ளன. இவ்வறு அமைச்சர் கூறினார். இதற்கிைடயே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் அரவிந்த் சிங் கூறுகையில், ‘‘ விமானங்களை தனியார் மயமாக்க ஏலப்பணி விரைவில் தொடங்கும்’’ என்றார்.

சர்வதேச சேவை எப்போது?
மெட்ரோ நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ஒரு வாரத்திற்கு 100 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், தற்போது இதில் 3ல் 1 பங்கு மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறி உள்ளார். உள்நாட்டு விமான சேவை வழக்கமான நிலையை எப்போது எட்டும் என்றும், சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கான வந்தே பாரத் திட்டத்தில் தனியார் விமான நிறுவனங்களும் இணையலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

* நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் (ஏஏஐ) பராமரித்து வருகிறது.
* டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்கள் பராமரிப்பில் உள்ளன.
*  முதலில் குறைவான எண்ணிக்கையிலும், பின் படிப்படியாகயும் விமான சேவை அதிகரிக்கப்பட உள்ளது. முதல் நாளில் 3ல் 1 பங்கு விமானங்களே இயக்கப்பட உள்ளன.

Tags : Government ,air passengers ,passengers , Air travelers, the federal government, the release of new guidelines
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்