×

ஆந்திராவில் ஊரடங்கால் 58 நாட்களுக்கு பிறகு கண்டக்டர்கள் இன்றி பஸ் போக்குவரத்து தொடங்கியது

திருமலை: ஆந்திராவில் ஊரடங்கால் 58 நாட்களுக்கு பிறகு கண்டக்டர்கள் இன்றி பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதில் முதியவர், சிறுவர்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து நேற்று முதல் அரசு பஸ்கள் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியது. மாநிலம் முழுவதும் தினசரி 11 ஆயிரம் பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக 1,683 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை 7 மணியளவில் பஸ்கள் ஓட தொடங்கின. ஆனால் கண்டக்டர்கள் இல்லாத நிலையில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலம் வழங்கப்பட்டது.

காகித டிக்கெட்டுகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. பஸ்சில் ஏற வரும் பயணிகள் அனைவரும் சானிடைசர் மூலம் கைகளை கழுவியபிறகே, அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு 10 விலையில் முகக்கவசம் வழங்கப்பட்டது. பயணிகளிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. ஆனால் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் உள்ளூர் டவுன் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதேபோல் வெளிமாநில பயணத்திற்கு தடை நீடிக்கிறது. மேலும் சொகுசு பஸ்களில் 26 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பஸ்சில் பயணிக்க அனுமதிக்கவில்லை. அடுத்த சில நாட்களில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்த மாநில போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Andhra Pradesh ,conductors , Andhra Pradesh, Curfew, 5 Conductors, Bus Transport
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி