×

தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதலாம்: மத்திய அமைச்சர் தகவல்

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் தங்கள் தேர்வுகளை எழுதலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால்  தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகான தேர்வுகளை சிபிஎஸ்இ ஒத்தி வைத்தது.  இந்நிலையில், தேர்வுகள் குறித்து மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அளித்த பேட்டி: சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத எந்த பள்ளிகளில் இருந்து பதிவு செய்தார்களோ அந்த பள்ளிகளிலேயே தேர்வுகளை எழுதலாம்.

 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் எளிதாக சென்று வருவதற்காக அந்தந்த பள்ளிகளில் தேர்வு எழுதலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தற்போது 12ம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதிகப்படியான பாடத்திட்டம் அப்படியே அடுத்த கல்வி ஆண்டுக்கும் தொடருமா அல்லது அதை சுருக்கி வழங்க வாய்ப்புள்ளதா என்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இடையே அடிக்கடி ஏற்படும் கேள்வி. நாங்கள் முழு பாடத்திட்டத்தையும் முடித்து தேர்வு நடத்தலாம் என்றுதான் கருதினோம்.  

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் அது முடியவில்லை, அதனால் பின்னர் அது குறித்து ஆலோசிக்கப்படும். அந்த நேரத்தில் அது குறித்து தெரிவிக்கப்படும். ஆனால் சிபிஎஸ்இ அதிகாரிகள் முன்பு தெரிவிக்கும் போது, அடுத்த ஆண்டில் பாடத்திட்டம் குறைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர். தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை கட்டமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் கனவான, தூய்மை இந்தியா, பலமான இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஒருங்கிணைந்த இந்தியா, திறமையான இந்தியா, வலிமையான இந்தியா ஆகியவற்றை இந்த புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றும். அத்துடன் இந்த புதிய கல்விக் கொள்கை என்பது, அறிவு மற்றும் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : CBSE ,schools ,Union Minister ,Union Minister Students , Schools, Students, CBSE Examinations, Union Minister
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...