×

ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் உள்ளூர் தொழிலாளிக்கு வேலை காத்திருக்கு ஆனா, ‘சரக்கு’ வாங்கவே நேரம் சரியா இருக்கு

சென்னை: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழில்துறை மொத்தமாக முடங்கி விட்டது. இதனால் வேலை இழப்பு அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், கொரோனாவால் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை சொல்லி மாளாது. கட்டுமானம். தொழிற்சாலைகள், ஓட்டல்கள் போன்றவற்றில் வேலை செய்த இவர்கள், ஊரடங்கால் தெருவுக்கு வந்து விட்டனர். பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்களுக்கு, வேலை செய்யும் இடமே வாசம் செய்யும் இடமாகவும் இருந்தது. அதுவரை வஞ்சகமே இல்லாமல் வேலை வாங்கியவர்களில் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் கால் வயிற்று கஞ்சியை கூட நிரப்ப உதவில்லை.

 தவியாய் தவித்த இந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு, சிறப்பு ரயில்களும் போதவில்லை; அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் கொத்துக் கொத்தாக வெளியேற தொடங்கி விட்டனர். அவர்களை வைத்து வேலை வாங்கியவர்கள், இனி வேலையை தொடரக்கூட ஆள் தேட வேண்டும். அப்படி ஒரு வெற்றிடத்தை விட்டு விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், தொழிற்சாலைகளில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.  இதுகுறித்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் கூறுகையில், ‘‘அதிகம் திறன் தேவைப்படாத சாதாரண தொழிலாளி வேலைக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பேக்கிங், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படாத பகுதிகளில் சில சிறு உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை நம்பியிருந்த இந்த பகுதிகளில் மட்டும் கடந்த 4ம் தேதிக்கு பிறகு 10,000 பேருக்கு தேவை ஏற்பட்டுள்ளது. தோராயமாக, தொழிலாளர் தேவை 40 % உயர்ந்துள்ளது.
சில தொழிற்சாலைகள், தங்களிடம் சாதாரண பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு, இயந்திர பணிக்கான பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளன. இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், ஜவுளி தொழிற்சாலைகளில் தேவை மிக அதிகம்’’ என தெரிவித்துள்ளது.படித்தவர்கள் பலர் கிராமங்களில் இருந்து நகரங்களை வேலைக்காக படையெடுக்கின்றனர்.

படிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு நகரங்களிலும், சில தொழிற்சாலைகளிலும் இருந்தாலும், அங்கு வெளிமாநில தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு அதிகம். தொழிலாளர் துறையின் புள்ளி விவரம்  மற்றும்  சில சர்வேக்களின்படி, தமிழகத்தில் வெளிமாநில  தொழிலாளர்கள் 10,67,506 பேர் உள்ளனர்.  இவர்கள் பெரும்பாலும்  பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில்  இருந்து வந்தவர்கள். தற்போது, வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற்றத்தால், ஊரக பகுதிகளில் உள்ளவர்களுக்கு, தொழிற்சாலைகள், நகரங்களில் கட்டுமான பணிகள் உள்ளிட்ட இடங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், தமிழகத்தில் ஒயின்ஷாப்கள் திறக்கப்பட்ட பிறகு, வேலைவாய்ப்பை தேடிச்செல்ல வேண்டிய பல இளைஞர்கள், குடிக்கு அடிமையானதால் டாஸ்மாக் கடைகளில் கலர் டோக்கன் வாங்கி, கால்கடுக்க காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. அதற்கே நேரம் போதவில்லை என்றபோது, வேலைக்கு எங்கே செல்வது. வருவாயை மட்டுமே கருத்தில் ெகாண்டு அரசு டாஸ்மாக் கடைகளை திறந்ததால் ஏற்பட்ட அவலம் இது. அதோடு, இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், மீண்டும் வெளிமாநில தொழிலாளர்களையே நம்ப வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

குடியே கதி.. அதுவே விதி..
வேலைக்கு போகாமல் டாஸ்மாக் கடையே கதியென கிடக்கும் குடிமகன்கள் தமிழகத்தில் ஏராளம்.  வாழ்க்கை கனவுகளை தொலைத்து, டாஸ்மாக் கடைகளில் கலர் டோக்கன்களோடு காத்திருக்கும் வரிசையிலேயே இது விளங்கிவிடும்.  இந்தியர்களின் ஆல்கஹால் நுகர்வு 2005ல் 2.4 லிட்டராக இருந்தது. 11 ஆண்டில் 5.7 லிட்டராக அதாவது, 2 மடங்கிற்கு மேல் ஆகிவிட்டது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது டாஸ்மாக் திறந்ததால், பல குடும்பங்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது.

சம்பளம் தர முடியல தக்க வைக்க வழியில்ல
 ‘‘எங்கள் தொழிற்சாலைகளில் உள்ள  ஊழியர்களில் 20 முதல் 40 சதவீதம் பேர் வெளிமாநில தொழிலாளர்கள். ஊரடங்கால்  கடந்த ஏப்ரல் மாத சம்பளம் வழங்க முடியவில்லை. இதுவும் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற  காரணம்’’ என தமிழ்நாடு சிறு, குறு தொழில்துறை சங்கத்தினர் கூறினர். இச்சங்கத்தில், தொழில்துறையை சேர்ந்த சுமார் 150 சங்கங்கள்  இணைந்துள்ளன; ஆயிரக்கணக்கான குறு, சிறு தொழில் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : outstation workers , Corona, curfew, outstation workers, local industry
× RELATED திருவனந்தபுரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்