×

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்ன போலி சித்த வைத்தியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்ன போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.   கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்து மக்களுக்கு தவறான தகவல் பதிவு செய்த போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை இந்திய மருத்துவம் மற்றும்  ஓமியோபதி துறை இயக்குநர் கணேசன் அளித்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  கடந்த 6ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் 4 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை சித்த வைத்தியர் என்று கூறி பல ஆண்டுகளாக நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.கோயம்பேட்டில் பெரிய அளவில் மருத்துவமனை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர் மீது தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு பரம்பரை வைத்தியர் என்று வழங்கப்பட்ட அங்கீகாரமும் கடந்த 2014ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்பும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்துவதாக தமிழகம் மட்டும் அல்லாமல் மலேசியா, வியட்நாம், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதனால் வெளிநாட்டு நோயாளிகளுக்கு அரசு அங்கீகரிக்காத மருந்துகளை அனுப்பி பல லட்சம் வருமானம் ஈட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டு நோயாளிகளுக்கு மருந்து தயாரிக்க தேனியில் குடோன் ஒன்று வைத்திருந்ததும் தெரியவந்தது. 4 நாள் விசாரணைக்கு பிறகு போலி சித்த வைத்தியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்தனர். சித்த வைத்தியர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதை தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் தேனி போடியை சேர்ந்த குருநாதன் என்பவர் வெண்குட்டம் நோயை குணப்படுத்துவதாக கூறி பல லட்சம் பணம் பறித்ததாகவும், மதுராந்தகத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் பக்கவாதம் நோயை குணப்படுத்துவதாக பல லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும் புகார் அளித்தனர். இந்த புகாரின்படி இரண்டு நாட்களுக்கு முன்பு போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்துவதாக கூறி வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள நோயாளிகளிடம் பல லட்சம் பணம் வசூலித்து அரசு அங்கீகரிக்காத மருந்துகளை கொடுத்து மோசடி செய்து இருப்பது விசாரணையில் உறுதியாகி உள்ளது.

இதனால் திருத்தணிகாசலத்தை மீண்டும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags : doctor ,Corona , Corona, drug, pseudoscience, thug act
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...