×

தேவையான உற்பத்தி இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்பு குறைந்தது: உயர் ரக வகைகள் மட்டுமே கிடைக்கும்

* ஊழியர்கள் தகவல்

சென்னை: ஊரடங்கு உத்தரவினால் மதுபானங்கள் உற்பத்தி இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் இருப்பு குறைந்துள்ளது. இதேபோல், மதுவிற்பனையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.  தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு தமிழகம் முழுவதும் கடந்த 16ம் தேதி 3,600 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. 43 நாட்களுக்கு பிறகு கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது திருவிழா கூட்டம் போல் டாஸ்மாக் கடைகளின் முன்பு குடிமகன்கள் திரண்டனர். இதனால் அந்த இரண்டு நாட்களில் மட்டும் 295 கோடிக்கு மதுவிற்பனையானது. இதேபோல், கடந்த 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் 402.9 கோடிக்கு மதுவிற்பனையானது.

தற்போது மதுவிற்பனையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதாவது சாதாரண நாட்களில் 80 முதல் 90 கோடி வரையில் மதுவிற்பனை இருக்கும். தற்போது, குடிமகன்கள் பலர் தங்களின் வழக்கமான பணிக்கு திரும்பியுள்ளதால் மதுவிற்பனை வழக்கமான நாட்களை போல் மாறியுள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக 100 கோடிக்கு மேல் இருந்த மதுவிற்பனை கடந்த 19ம் தேதி 91.5 கோடியாகவும், 20ம் தேதி98.5 கோடியாகவும் இருந்தது. இது வழக்கமாக நடைபெறும் மதுவிற்பனை என்றும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், ஊரடங்கு உத்தரவினால் மதுபான ஆலைகளில் செய்யப்பட்ட மது உற்பத்தியானது 43 நாட்களாக தடைபட்டது.

டாஸ்மாக் கடைகளிலும், குடோன்களிலும் மார்ச் 24ம் தேதிக்கு முன்பாக இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் மட்டுமே இருப்பு இருந்தது.இதனால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தற்போது மதுபானங்கள் ஸ்டாக்கானது 80 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 16ம் தேதி 3,600 கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட போது குடோன்களில் உள்ள மதுபானங்கள் உடனடியாக கடைகளுக்கு மாற்றப்பட்டது.   தற்போது அந்த மதுபானங்களும் தீர்ந்து விட்டதால் அனைத்து கடைகளிலும் கையிருப்பு குறைந்துள்ளது.
ஊரகப்பகுதிகளில் பெரும்பாலும் 120 முதல் 140 வகையிலான விலை குறைந்த மதுபானங்களே அதிக அளவில் விற்பனையாகும்.

இந்த ரக மதுபானங்கள் பெரும்பாலும் விற்றுத்தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் கூட இந்த வகை மதுபானங்கள் இருப்பு இல்லை. இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களுக்கு 180க்கு மேற்பட்ட விலையிலான பிரிமீயர் ரக மதுபானங்களையே விற்பனை செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளர். எனவே, இந்த பிரச்னையை சரிசெய்ய மதுபான ஆலைகளில் இருப்பு இருக்கும் மதுவகைகளை வாகனங்கள் மூலம் கடைகளுக்கு கொண்டுசெல்லும் பணியை நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : stores ,breweries ,Tasmanian , Task Shops, Brewery, Corona, Curfew
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...