×

கழுவு, கழுவுன்னா... எப்படி கழுவுவாங்க...? இந்தியாவில் 5 கோடி மக்களிடம் கை கழுவ சோப், தண்ணீர் இல்லை: ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 5 கோடி பேர் கை கழுவ சோப், தண்ணீர் கிடைக்காத அவலநிலையில் உள்ளனர். இத‍னால் பெரும் தொற்று அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (ஐ.எச்.எம்.இ) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வறிக்கை சுற்றுச்சூழல் குறித்த சுகாதாரப் பார்வைகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்களை காட்டிலும், உலக மக்கள்தொகையில் கால் பகுதியான வளரும் மற்றும் ஏழை நாடுகளில் தான் கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேஷியா உள்ளிட்ட 46 நாடுகளில் கை கழுவ சோப்பும் தண்ணீரும் கிடைக்காத அவலநிலையில் அந்நாட்டு மக்கள்தொகையில் தலா 5 கோடி பேர் உள்ளனர். சானிடைசர் பயன்பாடு, லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளித்தல் ஆகியவை தற்காலிக நடவடிக்கை மட்டுமே ஆகும். ஆனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த நீண்டக்கால நடவடிக்கைகள் தேவை. உலக நாடுகளில் கை கழுவ தண்ணீர், சோப் கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைக்காத 200 கோடிக்கும் அதிகமான மக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதே நேரம், 1990ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சவுதி அரேபியா, மொராக்கோ, நேபாளம், தான்சானியா ஆகிய நாடுகளில் கை கழுவுதல் முறையில் தற்போது கணிசமான அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : India , Corona, curfew, wash, India, hand wash soap, no water
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...