×

தொழிலாளர்களுக்கு உதவினால் உபி.யில் சிறை: பிரியங்கா குற்றச்சாட்டு

லக்னோ: நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செயல்படும் நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுபவர்களை உபி மாநில அரசு சிறையில் அடைப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் உத்தரப் பிரதேச மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப காங்கிரஸ் சார்பில் 1000 பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி மாநில அரசுக்கும் காங்கிரசுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்துகளை இயக்க அனுமதிக்காத மாநில அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

பிறகு லக்னோ போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ``புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் பேருந்துகளை ஏற்பாடு செய்ததால், அதன் தலைவரை பொய் வழக்கில் சிறைக்கு அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போரிடும் நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து, ரயில் டிக்கெட், உணவு கிடைக்க உதவுபவர்களை உபி அரசு சிறைக்கு அனுப்புகிறது’’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ``ராஜிவ் காந்தி தனது வாழ்க்கையை தேசத்துக்காக அர்ப்பணித்தார். இந்தியாவையும் இந்தியர்களையும் அவர் மிகவும் நேசித்தார். அவர்களின் வலியை உணர்ந்திருந்தார். அவரிடம் இருந்தே ஏழைகள், நலிவடைந்தோருக்கு உதவக் கற்று கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

Tags : Priyanka , Workers, Corona, UP State Prison, Priyanka
× RELATED தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது...