×

ஈரப்பதத்தை துடைத்து எடுத்த புயல்: தமிழகத்தில் அனல் தெறிக்கும்: 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்,..வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த அம்பன் புயல் நேற்று கரையைக் கடக்கும் போது கடல் காற்று மற்றும் தரைக் காற்று ஆகியவற்றின் ஈரப்பதத்தை துடைத்து எடுத்து சென்றதால் தமிழகத்தில் வெப்பம் தகிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான அம்பன் புயல் மெல்ல மெல்ல வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இந்த நிகழ்வின் காரணமாக வங்கக் கடலில் ஒரு வாரமாக கடல் சீற்றம், சூறாவளிக் காற்று, இடியுடன் கூடிய மழை என்று கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் அனைத்தும் பெரும் அலைக்கழிப்புடன் காணப்பட்டது.

நேற்று முன்தினம் அம்பன் புயல் கரையைக் கடந்ததும், கடல் பரப்பில் அமைதி திரும்பியுள்ளது. இருப்பினும், கடலில் சில இடங்களில் சீற்றம் இன்னும் நீடிக்கிறது.
இந்நிலையில், காற்றின் ஈரப்பதம் புயலால் உறிஞ்சப்பட்டதால், தற்போது தமிழகத்தில் காற்றில் வெப்பம் கலந்தே வீசுகிறது. இதனால் அதிகபட்சமாக தமிழகத்தில் பெரும் பாலான இடங்களில் நேற்று 41 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்தது. சில இடங்களில் 42 டிகிரி வரை அதிகரித்து காணப்பட்டது. இதனால் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக உணரப்பட்டது. இது 28ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் கேரளாவை ஒட்டிய பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.  மேலும், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

வட தமிழகத்தை பொறுத்தவரையில் அதிபட்ச வெப்ப நிலை உயர்ந்து வெப்பக் காற்று வீசும் என்பதால் 3 நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே நேற்று அனல் காற்று வீசியது. பகலில் யாரும் வெளியில் வரமுடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இதனால் தமிழக மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Tags : Storm ,Tamil Nadu ,The Inflammatory State ,house , Amban Storm, Tamil Nadu, Weather Center, Bengal Sea,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...