×

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தடை: அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க கூடாது

* விழாக்களில் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசு இனி இல்லை
* செலவினங்களை குறைக்க அரசு அதிரடி நடவடிக்கை
* அரசு செலவில் வெளிநாடுகள் செல்ல அனுமதி கிடையாது.
* அரசு அலுவலகங்களில் மேஜை, நாற்காலி வாங்கும் செலவு 50 சதவீதம் குறைப்பு
* ஆய்வுக்கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ், டெலி கான்பரன்ஸில்தான் நடத்த வேண்டும்.
* உபரகரணங்கள் கொள்முதல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

சென்னை: அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதித்துள்ள தமிழக அரசு, காலி பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் சால்வை, பூங்கொத்து நினைவு பரிசு வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது, அரசு செலவில் வெளிநாடுகள் செல்ல அனுமதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. செலவினங்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிர்வாக காரணங்களுக்காக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் காவல்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 100க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் உயர் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்துவதற்காகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது, கொரோனா தொற்று காரணமாக மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.  வணிக வரித்துறை, பதிவுத்துறை, வருவாய், போக்குவரத்து, டாஸ்மாக் துறைகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் கோடிக்கு வருவாய் கிடைக்கும்.  ஆனால், இந்த கொரோனா பாதிப்பால் இயல்பு வாழ்க்கை திரும்புவதில் தாமதம் ஏற்படும் என்பதால் வருவாய் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதனை சமாளிக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, அரசின் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், அனைத்து அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒரே துறையில் இருந்து அதே துறையில் வேறு பணிக்கு பணியமர்த்தக்கூடாது. சம்பளங்களின் செலவினங்களை குறைக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

பணியாளர்கள் குழுவின் ஒப்புதலின் பேரில் கருணை அடிப்படையில் ெதாடக்க நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்து கொள்ளலாம். மேலும், அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் படி அரசு பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  காலி பணியிடங்களை நிரப்ப அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை என்பதால், ஏற்கனவே, அரசு பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து, ஊதியம் தர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ஒரு மாதத்துக்கு 3 ஆயிரம் கோடி அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு மட்டும் தர வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில், ஊதியம் தருவதில் அரசுக்கு சிக்கல்கள் இருந்தாலும் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் இதர செலவினங்களை கட்டுப்படுத்தி, அரசின் நிதிச்சுமையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பறிக்கப்பட்டுள்ளது. பொது வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. அரசின் இந்த திடீர் முடிவுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இந்தாண்டு அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் ஓய்வு பெறவிருந்தனர். ஆனால், அவர்களுக்கான பணப்பயன்கள் அரசால் உடனடியாக தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசாரின் ஓய்வு வயது 58 வயதில் இருந்து 59 வயதாக உயர்த்தி கடந்த மே 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் பயண செலவு, அலுவலக செலவுகளை குறைக்க தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு, மற்றும் நிவாரண பணிகளால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களால், தமிழக அரசின் 2020-21ம் ஆண்டு செலவின மதிப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஈடுசெய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்கள் என பல்வேறு செலவினங்களை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி நடப்பு நிதியாண்டின் மொத்த செலவினத்தில் 20% செலவுகளை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அரசு அலுவலகங்களில் மேஜை, நாற்காலி வாங்குவது உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆகும் செலவினங்களில் இருந்து 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.
அரசு விழாக்களில் வழங்கப்படும் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசுகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது.

அரசு அதிகாரிகள் விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மாநிலத்துக்கு வெளியே பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணிக்கும் போது ரயில் கட்டணத்துக்கு இணையான கட்டணத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அரசு அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு வெளிநாடு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பயண செலவை குறைக்கும் வகையில், ஆய்வுக்கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ், டெலி கான்பரன்ஸ் மூலம் நடத்த அறிவுறுத்த வேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசு சார்பில் நடத்தும் ஆய்வுக்கூட்டங்களில் தமிழ்நாடு இல்லத்தில் தான் தங்க வேண்டும். விமானத்தில் எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது.

விளம்பர செலவுகளை 25 சதவீதம் குறைத்து கொள்ளவும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகங்களில் பேப்பர் கட்டணத்தையும் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதிகாரிகளின் தினப்படி 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான நிர்வாக ரீதியான பணி மாற்றத்துக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. பொதுவான பணி மாற்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து உத்தரவிடப்படுகிறது. அதே நேரத்தில் விருப்பத்தின் பேரில் பணி மாற்றம் செய்யலாம். அரசு அலுவல் ரீதியான மதிய விருந்து, இரவு விருந்துகளை மறு உத்தரவு வரும் வரை தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசிய துறைகளான சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மற்றும் அரசு உதவி அளிக்கும் திட்டங்களுக்கு மட்டும் உபகரணங்கள், கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற துறைகள் உபரகணங்கள் கொள்முதல் செய்வதை ஓராண்டுக்கு ஒத்திவைக்க உத்தரவிடப்படுகிறது. இதே போல் அத்தியாவசிய துறைகளான சுகாதாரத்துறை, தீயணைப்பு, காவல்துறை, மிக மிக முக்கிய நபர்களுக்கான வாகனங்கள் மட்டும் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய கணினிகளை மட்டும் மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போல பல்வேறு செலவினங்களில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை செலவினங்களை குறைக்க முடிவெக்கப்பட்டுள்ளது.

இந்த செலவினத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக உயர் அலுவலர்கள் தங்களது அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும். அவர்கள் செலவினங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government Offices ,Tamil Nadu ,Government ,Ban , Tamil Nadu Government Offices, New Workplaces, Corona, Curfew
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...