×

குமுளி மலைச்சாலையில் மண் அரிப்பால் விபத்து அபாயம்: சீரமைக்க கோரிக்கை

கூடலூர்: குமுளி மலைச்சாலையோரத்தில் மண் அரிப்பால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனியில் தொடங்கி கம்பம், குமுளி, தேக்கடி, பீர்மேடு, கோட்டயம் வழியாக 265 கி.மீ சென்று கொல்லத்தில் முடிவடையும் தேசிய நெடுஞ்சாலை 220 தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இதில் தேனி மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக குமுளி உள்ளது. குமுளிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி-கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலையில் செல்கிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊடங்கு நடைமுறையில் உள்ளதால் கடந்த 2 மாதங்களாக குமுளிக்கு பஸ் செல்லவில்லை. இபாஸ் பெற்று கேரளா செல்பவர்களும், கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களின் வாகனங்கள் மட்டுமே இப்பகுதி வழியாக அனுமதிக்கப்படுவதால், கேரளாவுக்கு அத்தியாவசி ெபாருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு வழியாக செல்கிறது. குமுளி மலைச்சாலையில் இறைச்சல்பாலம் கீழ்புரத்தில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் சாலையின் அடியில் மழைநீர் செல்லும் பாலம் உள்ளது. தற்போது இந்த பாலத்தின் ஓரத்தில்  மண் அரிப்பு ஏற்பட்டு சுமார் 2 தூரத்துக்கு எந்த பிடிமானமும் இல்லாமல் ரோடு அந்தரத்தில் நிற்கிறது.

வாகனங்கள் இந்த ஓரத்தில் சென்றால் சாலை சரிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குமுளி மலைச்சாலையில் கனரக வாகனப்  போக்குவரத்து தொடங்கும் முன்பாக, நெடுஞ்சாலைத்துறை சேதமடைந்த அந்த பாலத்தை இடித்து கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : soil erosion ,Kumuli Mountain Range , Kumuli hillside, soil erosion, accident risk
× RELATED இயற்கை முறையில் மண் அரிப்பை தடுக்க என்ன வழிமுறைகள்?