×

2 மாதமாக நீடிக்கும் ஊரடங்கால் நெல்லையில் காய்கனி விற்பனை கடும் பாதிப்பு: வியாபாரிகள் கவலை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தடை உத்தரவு நீடிப்பதால் காய்கனி விற்பனை கடுமையாக பாதிப்படைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருகின்றன. இதில் மொத்த காய்கனி வணிகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த 60 நாட்களாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் ஆடம்பரம் இல்லாமல் கட்டுப்பாடுகளுடன் குறைந்த நபர்களை வைத்து நடத்தப்படுகிறது. இதேபோல் கோயில்களில் முக்கிய விழா நாட்களில் பொதுமக்களால் வழங்கப்படும் அன்னதானம், கிறிஸ்தவ ஆலயங்களில் அசனபண்டிகை விழா, ரம்ஜானையொட்டி நோன்பு திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இவை மட்டுமின்றி பெரிய ஓட்டல்கள், உணவகங்கள் போன்றவையும் இன்னும் முழுமையாக செயல்படவில்லை.

இதுபோன்ற காரணங்களாலும், பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டதாலும் காய்கனி வியாபாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. விளைச்சல் அதிகமாக இருக்கும் அதேநேரத்தில் நுகர்வு பலமடங்கு குறைந்து விட்டது. இதன் காரணமாக விலையை குறைத்து விற்றாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை நீடிக்கிறது. குறிப்பாக அதிக நபர்களை வேலைக்கு வைத்து மொத்தமாக காய்கனிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதால் கடைகளுக்கு வாரத்தில் 2 அல்லது 3 நாள் கட்டாய விடுமுறை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2 மாதமாக மொத்த காய்கனி விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக வழக்கமான இடத்தை விட்டு வெவ்வேறு இடங்களில் பிரித்து வைத்து குறிப்பிட்ட நேரம் மட்டும் கடையை நடத்தும் நிலை உருவானது.

காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை காய்கனி வியாபாரம் செய்த போது ஓரளவுக்கு தாக்குபிடிக்கும் வகையில் விற்பனை நடந்தது. தற்போது மாலை 5 மணி வரை அனுமதி தந்திருக்கிறார்கள். அதேநேரத்தில் பலர் தங்களது தொழில் மற்றும் வேலைவாய்ப்பை இழந்ததால் ஆங்காங்கே சாலையோரங்களில் காய்கனி கடைகளை திறக்க தொடங்கி விட்டனர். அதேநேரத்தில் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டதால் காய்கனியை ஆர்வமுடன் வாங்க வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகள் மிக சுருக்கமாக கொண்டாடப்படுவதால் மொத்தமாக காய்கனிகளை ஆர்டர் செய்து வாங்குவதும் முழுமையாக நின்றுவிட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 டன் வரை விற்பனையான காய்கனி தற்போது 1 டன் அளவுக்கு கூட விற்பனை ஆவதில்லை. தடைகள் முழுமையாக நீங்கி திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெற்றால் இந்த தொழில் மீண்டும் சூடுபிடிக்கும் என்றார்.Tags : merchants , Curfew, Paddy, Vegetable Sales, Impact
× RELATED ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனை சூடுபிடித்தது