×

‘லைலத்துல் கத்ர்’ புனித இரவு: சமூக இடைவெளியுடன் வீடுகளில் முஸ்லிம்கள் வணக்க வழிபாடு

மதுரை: மதுரையில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை ஒட்டி, தங்கள் வீடுகளில் நேற்றிரவு சிறப்பு தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட முஸ்லிம்கள், இன்று அதிகாலையில் நோன்பு நோற்றனர். முஸ்லிம்களின் வேத நூலான திருக்குர்ஆன், ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் ஓர் ஒற்றைப்படை இரவில்தான் இறக்கியருளப்பட்டது. எனவே இந்த பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகள் சிறப்பு மிக்கதாகும். இவ்வகையில், இந்த இரவுகளில் 27ம் கிழமைக்கான இரவில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருக்கலாம் என்ற கணிப்பில், இவ்விரவை ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவாக முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர்.

திருக்குர்ஆனில் அல்லாஹ், ‘‘மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளை கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்து காட்ட கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது’’ என்றும், ‘‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது’’ என்றும் தெரிவித்துள்ளான். நபிகளாரும், ‘லைலத்துல் கத்ர்’ இரவை ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் தேடுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதன்படி, 30 நோன்புகளில், கடைசி 10 நாட்களின் ஒற்றைப்படை இரவுகள் தோறும் வணக்க சிறப்பு தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் நடத்தப்பட்டன. 27ம் இரவான நேற்றைய இரவிலும், முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி இல்லை. இதனால், வீடுகளில் முஸ்லிம்கள் நள்ளிரவு வரை சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர். பள்ளிவாசல்களுடன், வீடுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

புத்தாடை அணிந்து திக்ரு என்ற தியானம், தராவீஹ் உள்ளிட்ட இரவு சிறப்பு தொழுகையுடன், குர்ஆன் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இந்த இரவு வணக்கங்களை மேற்கொண்டனர். தொடர்ந்து இன்று அதிகாலையில் நோன்பு நோற்றனர்.

Tags : homes ,Muslims , Lailathul Qadr, holy night
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...