×

ஊரடங்கால் காலையில் இருந்து மாலை வரை ஒரே டென்ஷன்; திருமணம் முடிஞ்சதும் மணமகள் ‘தனிமை’.. கேரளாவில் மணமக்களுக்கு நடந்த சுவாரஸ்யமான ‘பிரிவு’

காசர்கோடு: கேரளாவில் காலையில் நடக்க வேண்டிய திருமணம் நீண்ட இழுபறி, பிரச்னைக்கு பின்னர் மாலையில் நடந்த நிலையில், ஊரடங்கால் மணமகள் தனிமைப்படுத்தப்பட்டார். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த பி.என்.புஷ்பராஜன் என்பவருக்கும், கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த கே.விமலா என்பவரும் கடந்த திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஊரடங்கு  விதிமுறைகள் காரணமாக மணமகள் விமலா தனது தாயை மட்டும் கேரளா அழைத்து வர முடிவெடுத்தார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்குள் நுழைய பாஸ் பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், மருத்துவ காரணங்களை கூறி உறவினர்களை சந்திப்பதாக கூறி விண்ணப்பித்தர். பாஸ் அனுமதி கிடைக்க தாமதம் ஆன நிலையில், மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டனர். வருகிற வழியில் தலப்பாடி சோதனைச் சாவடியில் சிக்கிக் கொண்டனர். சரியான பாஸ் இல்லாததால் அவர்களை கேரளாவுக்குள் நுழைய அதிகாரிகள்  மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட அதிகாரிகளைத்  தொடர்புகொண்டு ‘ஸ்பாட் பாஸ்’ பெற முயன்றனர். இறுதியாக, அவர்கள் மாலை 4  மணிக்கு மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

அதனால்  தாமதம் ஏற்பட்ட நிலையில், பதியாதுக்காவில் உள்ள புஷ்பராஜனின் வீட்டிற்கு ஒருவழியாக வந்து சேர்ந்தனர். அதன்பின் திங்கட் கிழமை மாலை 6.30 மணிக்கு அருகிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெறவிருந்தது. மணமக்கள் மாலை மாட்டிக் கொண்டனர். உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக, மணமகன் புஷ்பராஜன் விமலாவிற்கும் அவரது தாய்க்கும் காலையில் இருந்து சோதனைச் சாவடியில் காத்திருந்தார். அவர்களுக்கு நுழைவு கிடைத்ததும், புஷ்பராஜன் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மேலும் மாலை 6.30 மணியளவில், திருமண விழா வீட்டில் நடந்தது.

இருந்தும், திருமணம் எல்லாம் நடந்து முடிந்தும், மணமக்கள் ஒன்றுசேர அதிகாரிகள் விடவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் வந்ததால், மணமகள் விமலா மற்றும் அவரது தாயார் இருவரும் புஷ்பராஜனின் வீட்டில் கொரோனா அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுகுறித்து காசர்கோடு மாவட்ட ஆட்சியர் டி.சஜித் பாபு கூறுகையில், ‘ஸ்பாட் பாஸ் விண்ணப்பத்தை காலை 11 மணிக்கு அனுப்பினர். விசாரணைக்கு பின்னர் திருமணம் என்பதால் அனுமதிக்கப்பட்டது. செக் போஸ்டில் உள்ள அதிகாரிகள் விரைவாக பாஸ் பெற எல்லா முயற்சிகளையும் செய்தனர்’ என்றார்.


Tags : bride ,brides ,Kerala ,wedding , Curfew, marriage, bride solitude, Kerala
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்