×

கொரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரிப்பு; இறப்பு விகிதம் என்பது 3.06%-ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை

டெல்லி: இந்தியாவின் கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; கொரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணடைவோர் விகிதம் 40.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அதுபோல இறப்பு விகிதம் என்பது 3.06%-ஆக உள்ளது.

உலகளாவிய சதவீதமான 6.65% விட இந்தியாவில் குறைவாவே உள்ளது. மேலும் இந்தியாவில் உயிரிழந்தவர்களில் 64% பேர் ஆண்கள் எனவும், 36% பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 வயதுக்கு உட்பட்டவர்களில் 0.5% பேர் உயிரிழந்துள்ளனர். 15 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 2.5% பேரும், 30 முதல் 45 வயது உடையவர்களில் 11.4% பேரும், 45 வயது முதல் 65 வயது உடையவர்களில் 35.1% பேரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50.5% பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே 65 வயதுக்கு மேற்பட்டோர் தங்களை மிகவும் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அவர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் தங்களை இந்த கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளும் விதமாக தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதிலும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் தனி மனித இடைவெளி மற்றும் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுவது உள்ளிட்டவற்றை தவிக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Ministry of Health , Corona, Healing Rate, Mortality Rate, Federal Ministry of Health
× RELATED பாலஸ்தீனியர்கள் பலி 30 ஆயிரத்தை கடந்தது