×

2022ம் ஆண்டு வரை 50 நாள் ஊரடங்கு, 30 நாள் தளர்வு : கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் பரிந்துரை

லண்டன் : கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த 50 நாள் ஊரடங்கு, முப்பது நாள் தளர்வு எனப் புதிய முறையை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி 16 நாடுகளின் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர்.அதன் முடிவில்  இடைவெளிவிட்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைத்துள்ளனர். முதலில் 50 நாள் ஊரடங்கும், அதன்பின் 30 நாள் தளர்வும் என மாறி மாறி நடைமுறைப்படுத்தினால் நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏற்பாட்டை 2022ம் ஆண்டு வரை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் சோதனை, தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றைத் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதைப் பின்பற்றினால் வேலையிழப்பையும், நிதிச் சிக்கலையும் தவிர்க்க முடியும் என இந்த ஆராய்ச்சிக்குத் தலைமையேற்ற ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Tags : scientists ,British , 2022, 50 Day, Curfew, 30 Day, Relaxation: Corona, Virus, British Scientists, Recommendation
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்