×

ஒர்க்‌ஷாப்கள் திறந்தாச்சு...ஆளுமில்லை, ஆர்டருமில்லை...: ஊரடங்கால் நிபந்தனைகளுடன் அனுமதி

கோவை: கோவையில் ஒர்க்‌ஷாப்கள் திறந்தாலும் ஆர்டர் இல்லாமல் குறுந்தொழில் முனைவோர் தவிக்கின்றனர். கோவை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், நகர் பகுதியில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.‌ பின்னர், கடந்த வாரம் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒர்க்ஷாப்கள்  இயங்க அனுமதி வழங்கப்பட்டது. புறநகர் பகுதிகளான அரசூர், கணியூர், கருமத்தம்பட்டி உள்பட பல்வேறு பகுதியில் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முழுமையாக இயக்கத்திற்கு வராத நிலையில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான  ஒர்க் ஆர்டர் போதுமான அளவு கிடைக்கவில்லை. குறிப்பாக, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள்,  பம்பு,  டெக்ஸ்டைல் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆர்டர் மிக குறைந்த அளவே கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் பெரிய தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால்தான் அதை நம்பியுள்ள இதர குறுந்தொழில் நிறுவனங்களும் முழுமையாக செயல்பட முடியும். பெரிய நிறுவனங்களின் ஆர்டர்களை நம்பியுள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் ஏமாற்றத்தில் தவிக்கின்றன.  

கோவை மாவட்டத்தில் சிட்கோ பகுதியில் உள்ள லேத் ஒர்க்ஷாப் உள்பட பல்வேறு குறுந்தொழில் நிறுவனங்கள் போதுமான  ஒர்க் ஆர்டர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில் நிறுவனங்கள் முழுமையாக இயங்க முடியாத நிலை உள்ளது. தொழிலாளர்கள் பலர் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சென்றுவிட்டனர்.‌ ஆட்கள் பற்றாக்குறையாலும் நிறுவனங்கள் முடங்கிக்கிடக்கின்றன என தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : Workshops , Workshops open ,no rule, no order, permission , curfew conditions
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை