×

முடங்கிப்போச்சு மண்பாண்ட தொழில்: நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு

கோவை: ஊரடங்கு காரணமாக மண்பாண்ட தொழில் முற்றிலும் முடங்கி விட்டதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், காந்திபார்க், பன்னிமடை, காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் மண்பாண்ட தொழில் செய்யும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் மண்பாண்டம் செய்ய பொள்ளாச்சி, ஆனைகட்டி, கணுவாய், தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மண் எடுத்து வந்து, மண் பானை, மண் சட்டி, தண்ணீர் குடுவை, விறகு அடுப்பு உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். தவிர, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மண்பானை உள்ளிட்டவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மண் பானைகளுக்கு கோடை காலத்தில்தான் அதிகளவில் கிராக்கி இருக்கும். இதனால், கடந்த பிப்ரவரி இறுதியில் ஆடர் போட்டு பல வகையான மண் பாணைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், விற்பனை சீசன் துவங்குவதற்குள் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டது.

இதனால், மண் பானை விற்பனை அடியோடு முடங்கி விட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டாலும், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக இத்துறை தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுபற்றி கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மண்பாண்ட விற்பனையாளர் பரமேஸ்வரி கூறியதாவது: கோடை காலத்தில் விற்பனை நன்றாக நடக்கும். இதற்காக கடன் வாங்கி ஏராளமான மண்பாண்டங்களை வாங்கி குவித்தோம். ஆனால், ஊரடங்கால் விற்பனை முடங்கி விட்டது. இதனால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வட்டி மட்டும் கட்டி வருகிறோம். நல்ல சாப்பாடு, சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. ரேஷன் அரிசியை நம்பிதான் இருக்கிறோம். வயிற்றுவலி ஏற்படுகிறது எனக்கூறி குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள். தொழில் முடக்கத்தால் செய்வதறியாமல் தவிக்கிறோம். கோடை காலத்தில் தினமும் ரூ.2 ஆயிரம் வரை வியாபாரம் இருக்கும். ஆனால், இப்போது ரூ.200 முதல் ரூ.300 வரைதான் வியாபாரம் நடக்கிறது. அரசு எங்களுக்கு போதுமான அளவு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையேல், எங்களது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Paralyzed Pottery,Industry,Eat Good Eats
× RELATED பெரம்பலூர் அருகே அதிகாலை ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி