×

திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரயிலில் வெளிமாநிலத்தினர் 1,600 பேர் பீகார் பயணம்

திண்டுக்கல்:  திண்டுக்கல்லில் இருந்து பீகாருக்கு வெளிமாநில தொழிலாளர்கள் 1,600 பேர் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பீகாரில் இருந்து வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலை இழந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விருப்பம் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதன்பேரில் தேனி மாவட்டத்திலிருந்து 263 பேரும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 1,337 பேரும் நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

ரயில் நிலைய நுழைவாயிலில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ரயில் மூலம் அவர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு ரயில் டிக்கெட், ஒருவேளை உணவு, மற்றும் இரண்டு நாட்களுக்கு தேவையான கோதுமை, மைதா மற்றும் உணவு பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. கலெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். திண்டுக்கல் எஸ்பி சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சமூக இடைவெளி இல்லாமல் அனுப்புவதா?
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வெளிமாநிலத்தவரை, அதிகாரிகளும், போலீசாரும் சமூக இடைவெளி இல்லாமல் நிற்க வைத்து உடல் வெப்ப பரிசோதனை செய்தனர். மேலும் ரயிலில் அவர்கள் ஏறுவதற்காக வரிசையில் காத்திருந்தபோதும் சமூக இடைவெளி இல்லை. ரயிலிலும் ஒரு இருக்கையில் 3 முதல் 4 பேர் வரை சமூக இடைவெளியின்றி அமர வைக்கப்பட்டனர். ஏற்கனவே வெளிமாநிலத்திலிருந்து சொந்த மாநிலத்துக்கு திரும்புபவர்களால், கொரோனா தொற்று பரவும் சூழலில், சமூக இடைவெளியுடன் வெளிமாநிலத்தினரை அனுப்புவதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Dindigul ,Bihar , 1,600 people travel, Bihar , special train ,Dindigul
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...