×

கொரோனா தொற்றால் தொழில் முடக்கம் வறுமையில் தவிக்கும் சாலையோரம் காலணி தைக்கும் தொழிலாளர்கள்: அரசு கடனுதவி வழங்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: கொரோனா ஊரடங்கு உத்தரவால் சாலையோரம் காலணி தைக்கும் தொழிலாளர்கள் தற்போது வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். தங்களுக்கு அரசு கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையோரங்களில்  அமர்ந்து காலணி தைக்கும் தொழிலாளர்கள் கிராமத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் காலணிகள் அறுந்து போனால் அவற்றை தைத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனர். இவர்களின் ஒரு நாள் வருமானம் குறைந்தது ₹100 முதல் ₹150 வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. இதை கொண்டு இவர்களின் குடும்ப தேவையை பூர்த்தி செய்து வந்தனர். தமிழக அரசு காலணி தைக்கும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து இருந்தாலும், அந்த வாரியத்தில் உறுப்பினராக  இணைவதற்கு கூட தெரியாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாவட்டம் தோறும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அரசு மூலம் வழங்கப்படும் உதவிகள் கூட பெற முடியாமல் விழிப்புணர்வின்றி தவித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது  ஊராட்சி செயலாளர்கள் மூலம்  காலணி தைக்கும் தொழில் செய்பவர்களை கணக்கெடுத்து சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக வாழ்வாதாரத்தில்  தங்களை உயர்த்திக் கொள்வதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் ஊராட்சி டி.வி.துரைசாமி நகரை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளி ராமமூர்த்தி கூறுகையில், ‘நான் சுமார் 40 ஆண்டுகளாக எனது மனைவி சகுந்தலாவின் உதவியோடு காலணி தைக்கும் தொழில் செய்து வருகிறேன். தோல் பொருட்கள் உற்பத்தி செய்ய கடனுதவி பெற்று ஆம்பூர் பகுதிக்குச் சென்று முப்பது கிலோ அளவில் பதப்படுத்தப்பட்ட தோல்களை வாங்கி காலணி தைப்பதற்கும், ஆடு மாடுகளுக்கு பயன்படுத்தும் கழுத்துக் கயிறு, பூட்டான் கயிறு போன்றவை தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். பச்சூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் நடக்கும் வாரச் சந்தைக்கு சென்று உற்பத்தி செய்யும் தோல் பொருட்களை விற்பனை செய்தும், காலணிகளை தைத்தும் அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு பிழைப்பை நடத்தி வருகிறோம். இந்த தொழிலை தவிர்த்து வேறு தொழில் செய்ய முடியாததால் இதை நம்பி வாழ்ந்து வருகிறோம். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லை. இந்த தொழிலுக்காக எங்களுக்கு அரசு மூலம் இதுவரை எந்த ஒரு உதவியும் பெறவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிட்டத்தட்ட 2 மாதமாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் காலணி தைக்கும்   தொழில் செய்ய முடியாமல், நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் உணவுப்பொருட்களையும், ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வைத்து பசியை போக்கி வருகிறோம். குழந்தைகளுக்கு ஏதாவது சத்தான உணவுகள் வாங்கி தர வேண்டுமென்றால் கூட கையில் பணம் இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை தனியார், அரசு எந்த ஒரு நிவாரண உதவியும் வழங்கவில்லை. கொரோனா  ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்பு என்னைப் போன்ற சாலையோரத்தில் காலணி தைக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக தனியாக கடை வைத்துக் கொள்ளவும், தொழிலுக்கு தேவையான பொருட்களையும் அரசு இலவசமாக அல்லது மானிய கடனாகவோ வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : shoemaking workers ,shoemakers , Roadside shoemakers ,poverty freeze,coronavirus: Request , government loan
× RELATED எப்படியாவது ஜெயிக்க வைக்கணும் கம்பீரை கரை சேர்க்க களமிறங்கும் தலைகள்