×

பேரையூர் பகுதியில் சோள பயிரை சேதமாக்கும் பன்றிகள்: உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

பேரையூர்: பேரையூர் பகுதியில் பன்றிகள் சேதப்படுத்திய சோளப்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரையூர் அருகேயுள்ளது பெரியகுளம், இச்சிகுளம் கண்மாய்கள். இதன் நீராதாரத்தை நம்பி பேரையூர், ஆண்டிபட்டி, சொக்கம்பட்டி பகுதிகளில் சோளப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது போதிய மழை இல்லாததால் குறைளவு தண்ணீரை வைத்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் சோளப்பயிர்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் உள்ள பன்றிகள் இரவுநேரங்களில் சோளப்பயிர்களை ஒடித்து நாசம் செய்கிறது. மேலும் விளையும் பருவத்திலுள்ள பயிர்களையும் கடித்து சக்கையாக்கி போட்டு விட்டு செல்கிறது. பெரியகுளம் கண்மாய் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இரவுநேரங்களில் இவற்றை அடைத்து வைக்காமல் வெளியில் விடுவதால்தான் சோளப்பயிர்களை சேதமாக்கி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை வெளியில் திரிய விடுவதை தடுப்பதுடன், சேதமான சோளப்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பூம்பாறை வடிவேல் கூறுகையில், ‘போதிய மழை இல்லாததால் குறைந்தளவு உள்ள கிணற்று பாசன தண்ணீர் மூலம் சோளப்பயிர்களை வளர்த்து வருகிறோம். இயற்கைதான் மழை பெய்யாமல் மோசம் செய்கிறது என்றால் வளர்ப்பு பன்றிகள் காட்டிற்குள் வந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது’ என்றார். சொக்கம்பட்டி செல்வராஜ் கூறுகையில், ‘நான் 5 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளேன். பன்றிகள் தொந்தரவால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் நலிவடைந்து விட்டது. தொடர்ந்து இதேநிலை நீடித்தால் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்லத்தான் வேண்டும்’ என்றார். மாணிக்கம் கூறுகையில், ‘பன்றிகளின் அட்டகாசத்தால் சோளப்பயிர்கள் அனைத்தும் வீணாகி போனது. எங்கள் பயிர்களை தாக்கியது வளர்ப்பு பன்றிகளாக இருந்தால் வளர்த்தவர்களிடமும், காட்டுப்பன்றிகளாக இருந்தால் வனத்துறையிடமும் அதிகாரிகள் நஷ்டஈடு பெற்று தர வேண்டும்’ என்றார்.

ராஜ்குமார் கூறுகையில், ‘பெரியகுளம் கண்மாய்க்குள் கூடாரங்களை அமைத்து 100க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இவர்களின் பன்றிகள்தான் இரவுநேரங்களில் சோளப்பயிர்களை தாக்கி சேதப்படுத்தியிருக்க வேண்டும். கண்மாய்க்குள் குடில் அமைத்து பன்றிகள் வளர்க்க உத்தரவிட்ட அதிகாரிகள் யார்?. இப்பகுதியில் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டுமா? பன்றிகள் பாதுகாக்கப்பட வேண்டுமா?, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீதமுள்ள சோளப்பயிர்களையாவது காப்பாற்ற வேண்டும்’ என்றார். ரவி கூறுகையில், ‘பன்றிகள் தொந்தரவு நிலை தொடர்ந்தால் இப்பகுதி விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார்.

Tags : Peraiyur , damage corn crops,Peraiyur, Claim,provide appropriate relief
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது