×

விபத்துக்கள், கொலை, வன்முறைகள்.. :டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் தாக்குதல் சம்பவங்கள் 6 மடங்கு அதிகரிப்பு

சென்னை : டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் 6 மடங்கு தாக்குதல் சம்பவங்கள்  அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் குற்றங்கள் வெகுவாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த மே 7ம் தேதி சென்னை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து குடிபோதையில், கொலை, வன்முறை, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளும் தமிழகத்தில் அதிகரித்துவிட்டன. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் புதிய பிரிவான தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முயற்சி (TAEI) என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.  80 மருத்துவமனைகளில்,மே 7ம் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்களை ஆராய்ந்தனர். அதில் வன்முறை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 மடங்கும், சாலை விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 மடங்கும் அதிகரித்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்தனர். சராசரியாக மருத்துவமனைகளில் 150-160 வரை நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 7 அன்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,102 ஆக உயர்ந்தது. விபத்துக்கள்,  குடிபோதையில் கொலை மற்றும் வீட்டு வன்முறைகள் தொடர்பான பல வழக்குகளை போலீசார் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.


Tags : Violence ...: Task Shop Opening Accidents ,Murder ,Tamil Nadu , Accidents, Murder, Violence, Task, Shops, Tamil Nadu, Attack, Incidents, 6 times, Increase
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...