×

தமிழகத்திற்கு எந்த சேவையும் இல்லை: ஜூன் 1-ல் இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்...!

சென்னை: ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்  காரணமாக, பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு நடந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம்  செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


இதற்கிடையே, ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும்,  வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எனவும், கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும்,  விரைவில் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சிறப்பு ரயிலுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கு இன்று  முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பல்வேறு மாநிலஙகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் இதன் மூலம் சொந்த ஊர் செல்ல இந்திய ரயில்வே வழிவகை  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்க உள்ளது. விமான டிக்கெட் கட்டணங்கள் வழக்கத்தை விட 50% அதிகமாக  இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Booking ,Tamil Nadu ,Special Train , There is no service to Tamil Nadu: Booking for 200 Special Train to be Launched on June 1 ...!
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...