×

வடசென்னையில் அதிகரிக்கும் கொரோனா ராயபுரத்தில் 1400க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: குணமடைந்தவர்கள் 2000ஐ நெருங்கியது

சென்னை:சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 552 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில்  பாதித்தவர்கள் எண்ணிக்கை  7,672 ஆக உயர்ந்துள்ளது.  இதில் 1,931 பேர் குணமடைந்துள்ளனர்.   57 பேர் உயிரிழந்துள்ளனர்.  5,640  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த 44 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

ராயபுரத்தில்  1,423 பேர், கோடம்பாக்கத்தில்  1,137 பேர், திருவிக நகரில் 900 பேர் தேனாம்பேட்டையில் 822  பேர், தண்டையார்பேட்டையில் 723  பேர், அண்ணாநகரில்   610 பேர், வளசரவாக்கத்தில் 544. பேர், அடையாரில் 413 பேர் , அம்பத்தூரில் 330 பேர்,  திருவொற்றியூரில் 182  பேர் மாதவரத்தில் 155 பேர்,  மணலியில் 100 பேர், சோழிங்கநல்லூரில்  109  பேர், பெருங்குடியில் 96  பேர், ஆலந்தூரில் 84 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களில் 60.40 சதவீதம் ஆண்கள், 39.58 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடசென்னைக்கு உட்பட்ட  5 மண்டலங்களில்  இதுவரை 2,583 பேர், மத்திய சென்னைக்கு  5 மண்டலங்களில்  இதுவரை 3,755 பேர், தென் சென்னைக்கு உட்பட்ட  5 மண்டலங்களில் 1,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் தொற்றால் பலி:
வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்த ராயபுரம் அதிமுக முன்னாள் வட்ட செயலாளரும்,  மீன்வளத்துறை அமைச்சரின் ஆதரவாளரான 48 வயது நபர் கொரோனா பாதிப்பால் வானகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக பலியானார்.
இதேபோல், வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 4வது பிரதான சாலையை சேர்ந்த 73 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். ஓட்டேரி நியூ பேரன்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது ஆட்டோ டிரைவர் கொரோனா பாதிப்பால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  கடந்த 18ம் தேதி அவர் இறந்தார். அவரது உடல் ராயப்பேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று அவருக்கு  கொரோனா தொற்று உள்ளது என பரிசோதனை முடிவு வந்துள்ளது.



Tags : IDB ,North Chennai ,Corona Royapuram , Vadasena, Corona, Raipur, Curfew
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...