×

அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பாமக துணை நிற்கும்: அன்புமணி அறிக்கை

சென்னை: அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பாமக துணை நிற்கும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் ஊடகங்கள், கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. நாடு நெருக்கடிகளை சந்திக்கும் போது, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு துணை நிற்கும் ஊடகங்களே இப்போது நெருக்கடியை சந்திக்கும் நிலையில், அவற்றுக்கு உதவ வேண்டியது அரசின் கடமையாகும். ஊடகங்களில் அச்சு ஊடகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

 இதுகுறித்து விளக்குவதற்காக தி இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் ஆகியோர் நேற்று என்னை சந்தித்து பேசினர். செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஊடகங்களின் விளம்பரக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும் ஆகியவை தான் அச்சு ஊடகத்துறையினரின் முதன்மையான கோரிக்கைகளாகும்.

 இதுதொடர்பாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். உடனே பாமக நிறுவனரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து விளக்கினர். அதைக் கேட்ட அவர் ஊடகங்கள் எப்போதும் எங்கள் கூட்டணித் தோழர்கள். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் அனைத்தையும் நான் அறிவேன். மிகவும் நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் ஊடகங்களுக்கு பாமக துணை நிற்கும்’’ என்று உறுதியளித்தார்.

 பொருளாதார நிலைமை சரியாகி தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வருவதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகக்கூடும் என்பதால் அதுவரை அச்சு ஊடகங்களுகு அதிக விளம்பரங்கள், அதிக விளம்பரக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்க வேண்டியது அரசின் தார்மிகக் கடமை. இதை மத்திய அரசிடம்  பா.ம.க. வலியுறுத்தும். கொரோனாவை சமாளிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் அச்சு ஊடகக் குழுவினரும் விவாதித்தேன். வெகுவிரைவில் அனைத்து சிக்கல்களும் தீரும். இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று நம்புகிறேன். 


Tags : BJP ,Anbumani , Print media, mouthpiece,Anbumani
× RELATED சென்னையில் 2-வது நாளாக தொடர் கனமழை...!!...