×

கொரோனா கற்றுக்கொடுத்த பாடம் சைக்கிள் வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது: பஸ், ஆட்டோக்கு டாட்டா காட்டிய மக்கள்

சென்னை: கொரோனா கற்றுக்கொடுத்த பாடத்தால் பலர் மீண்டும் சைக்கிளில் அலுவலகம் செல்ல தொடங்கி உள்ளனர். பொது போக்குவரத்தான பஸ், ஆட்டோக்கு டாட்டா காட்ட தொடங்கியுள்ளனர்.  இந்தியாவிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அன்று முதல் விமானம், ரயில், பஸ், ஆட்டோ போன்ற ெபாது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொது போக்குவரத்து இன்று வரை தொடங்கப்படவில்லை. இதனால், மக்கள் எந்தவித பணிக்கும் செல்லாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர்.

 கார், மோட்டார் சைக்கிள் வைத்திருபவர்கள் மட்டும் உரிய அனுமதி பெற்று தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று வந்தனர். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கலாம். 100 பேருக்கு குறைவாக வேலை பார்க்கும் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தடை ெசய்யப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் தங்களுடைய மாவட்டத்துக்குள் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவிப்பை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கட்டிட தொழில், கூலி வேலை பார்ப்பவர்கள் தற்போது வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

அவர்கள் ஊரடங்கிற்கு முன்னர் ரயில், பஸ், ஆட்டோக்களை நம்பி தான் வேலைக்கு சென்று வந்தனர். தற்போது ரயில், பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. அவர்களுக்கு அரசு ஊழியர்களை போல பணிக்கு செல்ல பஸ்வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. இதனால், அரசு வேலையை பார்ப்பவர்கள் தவிர மற்றவர்கள் எப்படியாவது அலுவலகம் செல்ல வேண்டியது உள்ளது. ஒரு சிலர் தங்களிடம் உள்ள மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். மோட்டார் சைக்கிள் இல்லாதவர்களுக்கு ஆபத்து பாண்டவனாக தங்களது வீடுகளில் உள்ள சைக்கிள் பயன்பட தொடங்கியுள்ளது. இதனால், ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் உள்ள சைக்கிள்களை தூசித்தட்டி, ரிப்பேர் பார்த்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒரு சிலர் தங்களது மகன், மகளின் சைக்கிளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

முன்னர் சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றால் இழிவாக நினைப்பார்களோ? என்ற எண்ணம் மாறத் தொடங்கியுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முக்கால்வாசி பேர் சைக்கிள் ஓட்டி செல்லும் நிலையை பார்க்க முடிகிறது. கொரோனா எவ்வளவோ தீமைகளை செய்தாலும், ஒரு சிலருக்கு பல்வேறு பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இது குறித்து சைக்கிளில் அலுவலகம் செல்பவர்கள் கூறுகையில்,” வளர்ந்து வரும் நாகரீகத்துக்கு ஏற்ப ஒவ்வொருவரும் மாறி வந்தோம்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்தில் அலுவலகம் செல்வது என்பது முடியாத காரியம். அதனால், தான் தற்போது வீட்டில் ஒரு ஒரத்தில் இருந்த சைக்கிளை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளோம். சைக்கிளில் செல்வதால் உடலுக்கும் நல்லது, யாரையும் எதிர்ப்பார்க்காமல் விரைவில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல முடிகிறது. இது நல்ல மாற்றம் தான்” என்றார்.

Tags : Corona ,Tata , Corona, Cycle Life, Bus, Auto
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...