×

சடலத்தில் கொரோனா வாழும் நேரம் படிப்படியாக குறைகிறது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல்

புதுடெல்லி: இறந்தவர்களின் உடலில் கொரோனா வைரஸ் உயிர் வாழும் நேரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், மருத்துவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகாதபடி பிரேத பரிசோதனை மேற்கொள்ளும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக அவற்றை உடற்கூறு செய்யும் மருத்துவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலில் வைரஸ் எவ்வளவு நேரத்துக்கு பின்னர் செயலிழக்கும் என்று கூற முடியாது.

 ஆனால், சடலத்தில் அது உயிர் வாழும் நேரம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, நோய் தொற்றுக்கு உள்ளாகாமல் இருக்க பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் ஹைபோகுளோரைட் அல்லது 70 சதவீதம் ஆல்கஹால் கொண்ட திரவ நிலை சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும். ஏனெனில், பிரேத பரிசோதனையின் போது, நாசி மற்றும் வாய்வழி துவாரங்களின் மூலம் சடலத்தில் இருந்து வெளியாகும் வாயு அல்லது திரவங்களில் உள்ள மியூகோசலின் மேற்பரப்புகள் இயற்கையான சுழற்சியின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இவற்றின் மூலம் உடற்கூறு செய்யும் மருத்துவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. மேலோட்டமாக பயன்படுத்தும் கிருமி நாசினி மட்டுமே முழு பாதுகாப்பு வழங்கும் என்று கூற முடியாது.

இவ்வகை சடலங்களை அப்புறப்படுத்துவதற்கு குறிப்பிட்ட ஊழியர்களை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை நிலவும்பட்சத்தில் கூடுதல் ஊழியர்களை மருத்துவமனைகள் பணி அமர்த்தி கொள்ளலாம். இதற்கு அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை மருத்துவமனை நிர்வாகம் அணுகலாம். இந்த ஊழியர்களுக்கும் தொற்று பரவாத கிருமிநாசினிகள் வழங்கப்பட வேண்டும். வைரஸ் பாதித்த சடலங்களை மற்ற சடலங்கள் உள்ள பிணவறையில் வைக்க கூடாது. இட பற்றாக்குறை காரணமாக அப்படி வைக்க நேர்ந்தால், ஊழியர்கள் முழு கவச உடையுடன், அதனை இரண்டு பாலிதீன் கவர்கள் கொண்ட உறையினால் சுற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : Indian Institute of Medical Research , Corona, Indian Institute of Medical Research
× RELATED ஆண் சடலம் மீட்பு