வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் ரயில் நேரங்களை இணையத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ரயில் புறப்படும் நேரத்தை ரயில்வே மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய இணைய தளங்களில் வெளியிடுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திலக்ராஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது. ஆனால், அவர்கள் பயணத்திற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும், எந்த ரயிலில் செல்ல வேண்டும் என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. இதனால், ரயில் நிலையங்களிலும், சாலைகளிலும் காத்திருக்கிறார்கள். எனவே, எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை இந்தி, ஒடியா, பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் இணையதளத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி, தமிழகத்திலிருந்து சிராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் மாநிலங்களுக்கு அனுப்ப படுகிறார்கள். ஆனால், சில மாநிலங்கள் அவரகளை உள்ளேவர அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘வெளி மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் விபரங்கள், புறப்படும் நேரங்களை ரயில்வே மற்றும் தமிழக  பேரிடர் மேலாண்மை ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  வெளி மாநில தொழிலாளர்கள் ரயில்களில் புறப்படுவதற்கு முன் அவர்கள் தங்குவதற்கான இடம், அவர்கள் பாதுகாப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல ஏற்பாடுகள் ஆகியவற்றை அரசு செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் பதில்தர வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: