×

மணல் திருட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரியவர் அபராத தொகையை முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மணல் திருட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரியவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் முருகேசன். இவர் மீது  உரிய அனுமதி பெறாமல் மணல் எடுத்ததாக குடவாசல் போலீசார் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் முன்ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வக்கீல் ஜோதிகுமார் ஆஜராகி, முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.மேலும், நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கினால் மனுதாரர் ஒரு யூனிட் மணலுக்கு செலுத்தும் அபராத தொகையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் நீதிபதியிடம் கோரினார்.

அரசுத்தரப்பின் இந்த கருத்தை ஏற்ற நீதிபதி, மனுதாரர் ஒரு யூனிட் மணலுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 2 யூனிட்டுக்கு ரூ.30 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதே போல் நேற்று விசாரணைக்கு வந்த மேலும் 5 மணல் திருட்டு வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : sand theft ,bailiff ,chief minister , Sand Theft, Munjamin, Chief Minister's Public Relief Fund, Icort
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...