×

ஆப்பிரிக்காவில் சிக்கி தவிக்கும் 70 திரைப்பட கலைஞர்கள்

நடிகர் பிருத்விராஜ் நடித்து வரும் ஆடுஜீவிதம் மலையாள படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்கு சென்று கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். அதேபோல இன்னொரு படக்குழுவினர் ஆப்பிரிக்க நாட்டில் சிக்கி உள்ளனர். மலையாளத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட படம் டிஜிபூட்டி. இதனை உப்பும் மிளகும் படத்தை இயக்கிய எஸ்.ஜே.சினு இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிடிப்பிற்காக 70 பேர் கொண்ட குழுவினர் ஆப்பிரிக்காவில் உள்ள டிஜிபூட்டி என்ற இடத்திற்கு மார்ச் 5ம் தேதி சென்றனர். இந்த இடத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதால் படத்திற்கும் அந்த ஊரின் பெயரையே தலைப்பாக வைத்ததோடு, அந்த இடத்துக்கே படப்பிடிப்பு நடத்தச் சென்றனர்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதுதான் கொரோனா பிரச்சினை வந்தது. படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் 19ம் தேதியே முடிந்து விட்டது. 21ம் தேதி அவர்கள் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டதால் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அங்கு படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தவரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான அந்த ஊரைச் சேர்ந்தவர் அவர்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து தினசரி சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்த கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சினு கூறியதாவது: பல மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டுதான் இங்கு வந்தோம். திட்டமிட்டபடி படிப்பிடிப்பும் நல்லபடியாக முடிந்தது. ஆனால் எங்களால் நாடு திரும்ப முடியவில்லை. நாங்கள் நகர்புறத்தை விட்டு பல நூறு கிலோமீட்டர்கள் தள்ளி படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடித்து திரும்பியபோது நிலைமை மோசமாகி விட்டது. இங்கு நம் நாட்டைபோல மருத்துவ வசதிகள் இல்லை.  எங்கள் குழுவில் 18 மாத குழந்தை முதல் 60 வயதை தாண்டிய முதியவர்கள் வரை இருக்கிறார்கள். இதுவரை எப்படியோ சமாளித்து விட்டோம். இனியும் நாங்கள் நாடு திரும்பாவிட்டால் எங்கள் நிலைமை மோசமாகி விடும். எங்கள் விசாக்காலம் முடிந்து விட்டது. எனவே அரசு தலையிட்டு எங்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து அழைத்துச் செல்ல வேண்டும். என்று கூறியிருக்கிறார்.

Tags : film artists ,Africa , Africa, actor Prithviraj, 70 film artists
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...