×

இருப்பிட சான்று பெற்றவர்களுக்கே ஜம்மு காஷ்மீரில் அரசு பணி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருப்பிட சான்றிதழ் கொண்டவர்களுக்கு மட்டுமே அரசு பணி வழங்கப்படும் என்ற திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக கடந்தாண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்துடன் இருந்தபோது, காஷ்மீரில் வேறு மாநிலத்தினர் அரசு வேலையில் சேர முடியாது. இந்நிலையில், இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கான புதிய அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 1ம் தேதி வெளியிட்டது. அதில், ஜம்மு காஷ்மீரில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது காஷ்மீரில் 7 ஆண்டுகள் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் இருப்பிட சான்றிதழ் பெற முடியும்.

அகில இந்திய பணியில் உள்ளவர்கள், காஷ்மீரில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களின் குழந்தைகளும் உள்ளூர்வாசிகள் பிரிவில் வருவார்கள். அரசு பணியில் குரூப் 4 பதவிகள் வரை மட்டுமே, உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, இரண்டே நாளில் இந்த உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டது. குரூப்-4 பதவிகள் வரை என்பது அனைத்து அரசு பணிகளுக்கும் இருப்பிட சான்றிதழ் அவசியம் என மாற்றப்பட்டது. இந்த திருத்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. மேலும், கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க 3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இதற்கும் அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் வழங்கப்படும். அதோடு, பிரதம மந்திரி வய வந்தனா திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு வரும் 2023 வரை நீட்டிக்கவும் அனுமதி தரப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு இத்திட்டத்தை எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. முதியோருக்கு பென்சன் வருவாயை உறுதி செய்யும் இத்திட்டத்தில் அதிகபட்சம்  15 லட்சம் வரை முதலீடு செய்து மாதாமாதம் அதிகபட்சம் 10 ஆயிரம் வரை பென்சன் பெறலாம்.

Tags : Kashmir ,Jammu ,recipients ,Cabinet , Location Evidence, Jammu, Kashmir, Union Cabinet
× RELATED அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!