×

ஊரடங்கால் ஊடகத்துறைக்கு கடும் நிதி நெருக்கடி 1,800 கோடி நிலுவை தொகையை தராமல் தாமதம்: மத்திய, மாநில அரசுகள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: ஊடகத்துறைக்கு விளம்பர நிலுவைத் தொகையாக 1,800 கோடி தர வேண்டி இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் மீது இந்திய செய்தித்தாள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ‘கொரோனா ஊரடங்கினால் ஊடகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன. இதனால் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு, கால வரையற்ற விடுமுறை என்ற பல்வேறு நடவடிக்கைகளின் கீழ் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,’ என தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம், டெல்லி பத்திரிகையாளர் சங்கம், பிர்ஹான் மும்பை பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக அச்சு ஊடகத்தினரின் விளக்கத்தை கோரியிருந்தது. இந்நிலையில், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால், முன்பு எப்போதும் இல்லாத வகையில், அச்சு ஊடகங்கள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. அச்சு ஊடகங்கள் விளம்பரங்களின் மூலமே வருவாய் ஈட்டி வருகின்றன.

ஆனால், ஊரடங்கு காரணமாக அரசு விளம்பரங்கள் 80-85 சதவீதமும், இதர விளம்பரங்களும் 90 சதவீதம் குறைந்து விட்டன. ஆனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு 1,500 கோடி முதல் ரூ 1,800 கோடி வரை விளம்பர நிலுவைத் தொகையை இன்னும் வழங்காமல் உள்ளன. இதில், அச்சு ஊடகங்களுக்கு மட்டும் 800 கோடி முதல் 900 கோடி வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக வழங்கப்படாத இந்த நிலுவைத் தொகை விரைவில் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
விளம்பரங்கள் இல்லாத‍தால், பெரும்பாலான நாளிதழ்கள் பக்கங்களை குறைத்து வெளியிடப்படுகின்றன. விளம்பர வருவாய் இன்றி அச்சு ஊடகங்கள் நலிவடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,governments ,state ,Central ,State Governments ,Crisis , Media, Central, State Governments, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...