×

மீண்டும் தொழில் தொடங்கவா... இருக்கும் கடனை அடைக்கவா? 10,000 திட்டத்தால் பாதி பேருக்கு கூட பலனில்லை

* வேதனையில் தவிக்கும் சாலையோர வியாபாரிகள்
* சோதனையில் இருந்து மீள வழிசெய்யுமா அரசு
* 65.5% சாலையோர வியாபாரிகள், தங்கள் பொருட்களை வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
* 33.5 சதவீதம் பேர்
தெருவோரங்களிலேயே பாதுகாப்பாக வைத்து விட்டு செல்கின்றனர்.
* 1 சதவீதம் பேர்தான்,  வாடகைக்கு இடம்பிடித்து வைத்துள்ளனர்.

சென்னை: சாலையோர வியாபாரிகள் மீண்டும் தொழில் தொடங்கும் வகையில் 10,000 கடனுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் கூட, பாதிப்பேருக்குதான் போய்ச்சேரும். நடைமுறையில், அந்த பாதி பேருக்கு கூட பலன் கிடைக்க வாய்ப்பே இல்லை என தெரிய வந்துள்ளது.
 நிரந்தர வருமானம் இல்லை, ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை, வானம் பார்த்த பூமி போல் சூழ்நிலைக்கேற்ப வியாபாரத்தை மாற்ற வேண்டும். மக்களின் தேவை மற்றும் மன நிலையை புரிந்து கொண்டால் மட்டுமே கொஞ்சமாவது வியாபாரம் பார்க்கலாம்.

அதோடு உள்ளூர் ரவுடியில் ஆரம்பித்து, பல சோதனைகளை சமாளிக்க வேண்டும். நாட்டின் பெரும்பாலான சாலையோர வியாபாரிகளின் நிலை இப்படித்தான் உள்ளது. அன்றாடங் காய்ச்சிகளான இவர்களுக்கு, கொரோனா ஊரடங்கு பேரிடியாக அமைந்துவிட்டது.  இந்த சூழ்நிலையிதான், மத்திய அரசு 21 லட்சம் கோடிக்கு ஊக்க திட்டங்களை அறிவித்தது. அதில், சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 கடன் வழங்கப்படும், இதனால் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பலன் அடைவார்கள் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். உண்மையில், இந்த கடனுதவி மீண்டும் தொழில் செய்ய உதவாது என்கின்றனர், சாலையோர வியாபாரிகள்.

 இதுகுறித்து, தேசிய சாலையோர வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சங்கீதா சிங் கூறுகையில், ‘‘எங்களிடம் டெல்லியில் 3 லட்சம் சாலையோர வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். பணமின்றி தவிக்கிறார்கள். திரும்ப தொழில் தொடங்கும் வாய்ப்புகள் தென்படவில்லை. இந்த நேரத்தில், கடன் தருவதாக கூறுகிறது மத்திய அரசு. முதலில், நேரடியாக நிதியுதவி வழங்க வேண்டும். சில மாநில அரசுகள் இவ்வாறு வழங்கியுள்ளன. அடுத்ததாக, அனைவரையும் தொழில் தொடங்க அனுமதிக்க வேண்டும். இப்போது, சுமார் 3%சாலையோர வியாபாரிகள்தான் தொழில் செய்கின்றனர்’’ என்றார்.

 மேலும் சில சாலையோர வியாபாரிகள் கூறுகையில், ‘‘மத்திய அரசு எதற்காக இந்த திட்டத்தை அறிவித்துள்ளது? தொழில் தொடங்கத்தான் என்றால், அதற்கேற்பதானே வழங்க வேண்டும். இதை வைத்து தொழில் தொடங்குவதா? அல்லது இருக்கும் கடனை அடைப்பதா? வீட்டுத்தேவையை பூர்த்தி செய்வதா…? ஒன்றுமே புரியவில்லை. திக்குத்தெரியாமல் தவிக்கிறோம். எங்கள் நிலை அரசுக்கு தெரியவில்லையா?. தற்போதைய சூழ்நிலையில் வட்டியை கூட திருப்பி செலுத்த முடியாது. மாநில அரசுகளும் எங்கள் நிலையை உணர்ந்து உதவ வேண்டும்’’ என வேதனை தெரிவித்தனர்.

 தேசிய சாலையோர வியாபாரிகள் சங்கம் 2014ம் ஆண்டு ஒரு சர்வே எடுத்திருந்தது. இதில், நாடு முழுவதும் சுமார் 1 கோடி சாலையோர வியாபாரிகள் உள்ளனர் என தெரிவித்திருந்தது. அதிலும், நகரங்களில் உள்ள மக்கள் தொகையில், சாலையோர வியாபாரிகள் 2 முதல் 2.5 சதவீதம் உள்ளனர். சங்கங்களில் பதிவு செய்த மற்றும் சங்கங்கள் சார்பில் எடுக்கப்பட்ட தோராய மதிப்பீட்டின்படி மாநில வாரியாக டெல்லியில் 3 லட்சம் பேர், ஒடிசாவில் 65,000 பேர், தமிழகத்தில் 8 லட்சம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.

அதே ஆண்டுதான், சாலையோர வணிகர்கள்  வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் - 2014 கொண்டு வரப்பட்டது.
கொரோனா ஊரடங்கால்  தற்போது சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. வியாபாரத்துக்காக சாலையில் சுற்றிய நாங்கள், இன்று குடும்பத்தோடு நடுத்தெருக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

கடன் வேண்டாம்... காசு கொடுங்கய்யா...
* சேமிப்பை வைத்து தொழில் செய்பவர்கள் 65%
* கூட்டுறவு சங்கம், சுய உதவி குழு மூலம் கடன் வாங்குபவர்கள்  2%
* கடன் வாங்கினால் வட்டியை கூட செலுத்த முடியாது. பல நேரங்களில் கந்து வட்டி வாங்கி சீரழிந்து
விட்டோம். அரசாவது, கடனுக்கு பதில் நேரடி நிதியுதவி வழங்க வேண்டும் என்பது சாலையோர வியாபாரிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

வேலை நேரம்
* 75 சதவீதம் பேர், 8 முதல் 12 மணி நேரம் வியாபாரம் செய்கின்றனர்.
* இடத்தை சுத்தம் செய்வது, பொருட்களை அடுக்கி வைப்பதிலேயே 2 மணி நேரம் போய்விடுகிறது.
* போக்குவரத்து பிரச்னை போன்ற காரணங்களுக்காக விரட்டப்பட்டால், பாடுபட்டதெல்லாம் பாழாகிவிடுகிறது.



Tags : Roadside Merchants, Federal Government, Corona, Curfew
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...