×

வங்கிகளில் ‘பாஸ்புக் பதிவு’ திடீர் நிறுத்தம்

சென்னை: வங்கிகளில் திடீரென பாஸ்புக் என்ட்ரி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் தற்போது வழக்கம் போல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட தொடங்கியுள்ளன.  தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகே வங்கியில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் முழுமையாக வங்கிகளில் பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் பதிவு, புதிய பாஸ்புக் வழங்கும் சேவை  நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக யாராவது அக்கவுன்ட் தொடங்கினாலும் அவர்களுக்கும் பாஸ்புக் வழங்கப்படுவது இல்லை. மாறாக அக்கவுன்ட் ஓபன் செய்ததற்கான அக்கவுன்ட் நம்பர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பாஸ்புக் பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது என்றுகூட தெரியாத நிறைய பேர் வங்கிகளுக்கு கால் கடுக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். குறிப்பாக பென்சன் பணம் வந்துள்ளதா என்று பார்க்க பாஸ்புக்கில் பதிவு செய்து கொடுங்கள் என்று தள்ளாத வயதிலும் முதியோர் வங்கிகளுக்கு வருகின்றனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில், “கொரோனா பாதிப்பு வந்த புதிதில் நோய் பரவி விடக்கூடாது என்பதற்காக பாஸ்புக் என்ட்ரி நிறுத்தப்பட்டது. தற்போது வங்கிகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. இருந்தாலும் பணியாளர்கள் பற்றாக்குறையால் இதுபோன்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது. பணியாளர்கள் அதிகமாக உள்ள இடங்களில் இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருகிறது” என்றனர்.

Tags : banks ,stop , Banks, passbook record
× RELATED ஒன்றியத்தில் புதிய அரசு பதவி ஏற்றதும்...