×

காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும், ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்பு  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, ெசன்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்த மாவட்ட பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  மேலும், தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில்  வடக்கு மண்டலத்தில் ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்தில்  ஏடிஜிபி ஆபாஸ்குமார், தெற்கு மண்டலத்தில் ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி, மேற்கு மண்டலத்தில் ஏடிஜிபி அபய்குமார் சிங் கடந்த மே 1ம் தேதி நியமிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி, காவல்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரிகள் என தனித்தனியாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், ரயில்வே ஐஜி வனிதா, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், கடலோர பாதுகாப்பு படை டிஐஜி பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chengalpattu ,Kanchi ,Tiruvallur Districts Kanchi ,Thiruvallur Districts , Government of Kanchi, Chengalpattu, Tiruvallur, Tamil Nadu
× RELATED செங்கை, காஞ்சி மாவட்டங்களில் மனுக்களை...