×

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்: கொரோனா தடுப்பு விழிப்புணர்வுக்கு 2500 களப்பணியாளர்கள் நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெளியில் சுற்றுபவர்களை தடுக்க 2,500 களப்பணியாளர் கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட 30 வார்டுகளில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது.  மற்றப் பகுதிகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் சென்னையில் 1,979 குடிசைவாழ் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.  இப்பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் வழங்க 135 நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன.  

இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தக் குழுக்களில் மொத்தம் 2,500 களப்பணியாளர்களும், 15 களப்பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என மொத்தம் 166 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.  ஒரு குழுவிற்கு ஒருவர் என 100 குழுவிற்கு 100  திட்ட பணி மேலாளரும், 100 தகவல் மேலாளரும் நியமிக்கப்படவுள்ளனர்.  ஒவ்வொரு களப்பணியாளரும் 300 வீடுகளை கண்காணிப்பார்கள்,  களப்பணியாளர்கள்  ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படை தேவைகளான உணவு, மளிகைப் பொருட்கள், குடிநீர், பொது கழிப்பிடம் போன்ற காரணங்களுக்காக வெளியே சென்று வருவதை  கண்காணித்து அந்த இடங்களில் கூட்டம் கூடாமல் இடைவெளி கடைபிடிப்பதை பொதுமக்களிடையே அறிவுறுத்துவார்கள்.  

ஒவ்வொரு வீட்டிலும் நபர்களின் வயது, பாலினம், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை சேகரித்து, எளிதில் நோய்வாய்படக்கூடிய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி புரிதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இந்தக் களப்பணியாளர்கள் வருகின்ற 24ம் தேதி முதல் களப்பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும், இந்தப் பணிகளில் ஈடுபடும்  தன்னார்வலர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Field Officers , Minister SP Velumani, Corona, Field Workers
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...