×

கொரோனாவால் பல லட்சம் பேர் வேலை இழப்பு: பசி போக்க கூழாவது கொடுங்க... பிழைக்க கூலி வேலையாவது தாங்க...

* உடம்பில் தெம்பு இருக்கு உழைச்சு சாப்பிடுறோம்
* தினக்கூலி தொழிலாளர் குடும்பங்கள் கதறல்

சென்னை: கொரோனாவால் அன்றாட கூலி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையில், ‘எங்கள் குடும்பத்துக்கு சோறு போடுங்க இல்லனா... உடலில் உழைக் தெம்பு இருப்பதால் வேலையை கொடுங்க நாங்க சொந்த காசில் வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறோம்’ என்று தமிழக அரசுக்கு அக்குடும்பத்தினர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் அனைத்து துறைகளை சேர்ந்த மக்களையும் கொரோனா வைரைஸ் வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. இதில் கூலித் தொழிலாளர்களின் நிலைமை மிக மிகக் கொடுமை. ஒரு நாள் வேலை இல்லாவிட்டால் வீட்டில் அடுப்பு எரியாது.

அன்று ஈரத் துணியை வயிற்றில் போட்டு விட்டத்தை பார்த்தபடி படுக்க வேண்டியதுதான். இதுதான் யாதார்த்த நிலை. அக்கம் பக்கம் பசி என்று கேட்டு வாங்கி சாப்பிட கூச்சம் ஒரு பக்கம்... மறுபக்கம் இல்லை என்று சொல்லிவிட்டால் அவமானம் ஒரு பக்கம் என்பதால் ஒரு வேளை உணவுடன் எத்தனையோ குடும்பங்கள் தமிழகத்தில் தத்தளிக்கின்றன. ஒவ்வொருவரின் கண்ணீரும் ஒரு கதையை சொல்கின்றன. ஒவ்வொருவரின் வயிறும் வாழ்க்கை பாடத்தை நமக்கு சொல்லித் தருகின்றன. தமிழகத்தில் 35 லட்சம் அன்றாட கூலி தொழிலாளர்கள் நிலைமை என்பது யோசிக்க வேண்டிய ஒரு விஷயம். இவர்கள் தினக்கூலியை நம்பி தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

தினமும் வேலை செய்தால் தான் அவர்களுக்கு கூலி கிடைக்கும். கொரோனாவால் வேலை வாய்ப்பு இல்லாததால்,  கிடைத்த பொருட்களை வைத்து இதுநாள் வரை சமாளித்து வந்தவர்களுக்கு இனியும் வீடுகளுக்குள் முடங்கியிருந்தால் பட்டினி சாவை தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது 4ம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தாலும், பெரிய அளவில் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. குறிப்பாக கூலி தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் உடல் உழைப்பு கொடுக்கும் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்படவே இல்லை. நிறுவனங்களே நிரந்தர தொழிலாளர்களை வைத்து சமாளித்து கொண்டிருக்கின்றன. காய்கறி, எலக்ட்ரானிக், மளிகை, எலக்ட்ரிக், நடைபாதை கடைகள் நடந்தால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை.

ஆனால் மக்கள் கூட்டம் இல்லாததால், அதுவும் தினக்கூலிகளுக்கு வேலை கிடைப்பதில் பிரச்னையாக மாறியது. தமிழக அரசும் இவர்களை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும்  எழுந்துள்ளது.  இவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளையாவது வழங்கியிருந்தால் உணவு பிரச்னையாவது குறைந்திருக்கும். அதுவும் இல்லாததால் தற்போது அவரகள் உணவு கிடைக்காமல் குடும்பத்தினருடன் அவதியுறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  எப்படி கோடை காலத்தில் குடிநீருக்காக காலி குடங்களுடன் அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தார்களோ, அதேபோன்று உணவுக்கு குழந்தை, குட்டிகளுடன் தெருக்களில் நின்று போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

‘ஒன்னு சோறு போடுங்க.. இல்லனா வேலை கொடுங்க’ என்பது தான் அவர்களது தற்போதைய கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு உடனடியாக அவர்களின் பிரச்னைகைளை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பட்டினி சாவுகளை தமிழக அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் கூறியதாவது: கடந்த 60 நாட்களாக வீடுகளில் முடங்கியிருக்கிறோம். வேலைக்கு சென்றால் தான் எங்களுக்கு கூலி கிடைக்கும். அதற்கும் இப்போது வழியில்லாமல் உள்ளது. தமிழக அரசும் எங்களை கண்டு கொள்ளவில்லை. யாராவது வேலை தருவர்களா என்று கேட்டு பார்த்தோம், யாரும் இப்போதைக்கு எந்த வேலையும் தர முன்வரவில்லை.  அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது.

அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வோம். குழந்தைகள் எல்லாம் பட்டினியால் சுருண்டு விழக்கூடிய நிலையில் உள்ளனர். கடன் கேட்க கூட வழியில்லாமல் உள்ளோம். குழந்தைகள் பசியால் வாடுவதை பார்த்து, யாராவது அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கிறார்களா என்று அலைய வேண்டியதுள்ளது. எங்களை போன்ற பல லட்சக்கணக்கான அன்றாட கூலி தொழிலாளர்களின் நிலை இதுதான். பட்டினியால் சாகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே உடனடியாக தமிழக அரசு எங்களை நிலையை உணர்ந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். பசிக்கு சோறு போடுங்கள் இல்லாவிட்டால் வேலையாவது தாருங்கள் செய்ய  தயாராக உள்ளோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

காலையில் வேலை..மாலை கூலி... இரவு காலி...
காய்கறி சந்தையில் மூட்டை ஏற்றி இறக்கும் தொழில், தோட்ட தொழிலாளி, செப்டிக் டேங்க் கிளீன் செய்பவர், செருப்பு தைக்கும் தொழிலாளிகளின் வருவாய் அன்று கிடைக்கும் வேலையை பொறுத்தே அமைந்துள்ளது. காலையில் கிடைக்கும் கூலி வேலையை 100 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல் செய்தால் மாலையில் கூலி கிடைக்கும். வீட்டிற்கு கொண்டு ெசன்றால் அன்றைய இரவு உணவுக்கான தேவையோடு கூலி பணம் கரைந்துவிடும். என்னதான் சொன்னாலும் கூலி தொழிலாளியின் வாழ்க்கை விட்டில் பூச்சி போல அன்று வரும் வருமானத்தோடு தொடங்கி இரவோடு முடிந்துவிடுகிறது.


Tags : millions ,Corona , Corona, mercenary work, curfew
× RELATED நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ்...