×

டாஸ்மாக் கடையில் மாற்றினர் தமிழகம் முழுவதும் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பல் சிக்கியது: வீட்டில் பதுக்கிய 65 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில்: புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்றிய 6 பேர் கும்பல் சிக்கியது. இந்த கும்பல் நாகர்கோவிலில் பதுக்கி வைத்திருந்த ₹65 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து புழக்கத்தில் விட்டது பற்றி போலீசார் விசாரித்துவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த மூங்கித்தாம்பட்டி மதுக்கடையில் கடந்த 16ம் தேதி ஒருவர் கொடுத்த 200 கொடுத்து குவார்ட்டர் வாங்கினார். அந்த நோட்டில் சந்தேகமடைந்த விற்பனையாளர், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் புகார் செய்தார்.  அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, திருமயம் அடுத்த கீழதுர்வாசபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (33) என்பதும், அவர் வைத்திருந்தது கள்ள ரூபாய் நோட்டுக்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சந்தோஷ்குமாரையும் அவரது கூட்டாளிகளான அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (30), இப்ராகிம் (27), முகமது நசுரூதீன், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (48), நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் (34) ஆகியோரையும் கைது செய்தனர்.  இவர்களிடம் நடந்த விசாரணையில் நாகர்கோவிலில் புத்தேரியில் உள்ள மணிகண்டன் வீட்டில் வைத்துதான் ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து பிரிண்ட் எடுத்து, பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாகர்கோவில் மணிகண்டன் வீட்டில் இருந்து ஸ்கேனர், பிரிண்டர், கள்ள ரூபாய் நோட்டுக்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். 10, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 65 லட்சத்து 41 ஆயிரத்து 530  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதாகி உள்ள மணிகண்டன் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நாகர்கோவிலில் வேலை இல்லாததால் சென்னைக்கு சென்றார். அங்குதான் சந்தோஷ்குமார், சுரேஷ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டனுக்கு கள்ளநோட்டு தொழில் நுட்பம் தெரியும் என்பதால், அவரது வீட்டில் வைத்து ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்துள்ளனர். பின்னர், கூட்டம் அதிகமான மதுக்கடைகளில் ரூபாய் நோட்டுக்களை மாற்றி உள்ளனர். இந்த கும்பலுக்கு தமிழகம் முழுவதும் நெட்வொர்க் உள்ளதாக தெரிகிறது. யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் உள்ளனர்? எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : gang ,counterfeit bankers ,Tamil Nadu ,shop ,home , Task Shop, Tamil Nadu, counterfeit note, corona, curfew
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....