×

டாக்டர்கள், போலீசார், தூய்மை பணியாளருக்கு மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணம் தரப்பட்டதா?

* ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
* விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில்  பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மதுரை மக்கள் கண்காணிப்பக நிர்வாக டிரஸ்டி சத்தியமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் மருத்துவத்துறையினர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள்  உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் போதுமானதாக இல்லை.

பல இடங்களில் முகக்கவசம் கூட வழங்கப்படவில்லை. டாக்டர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள்  பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசம், கையுறை போன்றவை இல்லாமலேயே பணியாற்றுகின்றனர். இதனால் தான் அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க ‘பிபிஇ’ எனப்படும் கவச பொருட்கள் முக்கியம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல் அம்மா உணவக ஊழியர்களுக்கும், தூய்மை பணியாளர்களும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் அவல நிலையில் உள்ளதாக தினகரன் நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளது.

 எனவே, அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம், கையுறை, ரப்பர் பூட்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கவும், அதை கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று வீடியோ கான்பரன்சிங்கில் விசாரித்தனர். அரசு வக்கீல் சேதுராமன் ஆஜராகி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலரின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘‘முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 350.29 கோடியும், சுகாதாரத்துறைக்கு 149.79 கோடியும், காவல்துறைக்கு ரூ.6.5 கோடியும் என ரூ.506.58 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2 லட்சத்து 80 ஆயிரத்து 696 பிபிஇ உடைகள் வழங்கப்பட்டுள்ளன. 2.17 லட்சம் ‘என் 95’ மாஸ்க்குகளும், 2.80 லட்சம் கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. ன்களப்பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஜிங்க் மற்றும் வைட்டமின் ‘சி’ மாத்திரைகள் வழங்கப்படுகிறது. போதுமான உபகரணங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றை முறையாக பயன்படுத்துவதில்லை’’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘முன்களப்பணியாளர்களுக்கு முழுமையாக மறைத்து பாதுகாக்கும் வகையிலான மாஸ்க்குகள், இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா?

அவற்றை முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியுமா’’ என கேள்வி எழுப்பினர். பின்னர், ‘‘தமிழக அரசின் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுதொடர்பாக நீதிமன்றமே உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்’’ எனக் கூறிய நீதிபதிகள் விசாரணையை மே 27க்கு தள்ளி வைத்தனர்.


Tags : policemen ,Medical Council ,cleanup worker ,cleanup staff , Doctors, cops, cleaning staff, corona, curfew
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...