×

கொரோனா ஊரடங்கால் கேரளாவில் இருந்து 110 கிமீ நடந்தே தமிழகம் வந்த தொழிலாளர்கள்: யானைகள் நிறைந்த காட்டில் ‘திக்.. திக்...’ பயணம்

உத்தமபாளையம்: கொரோனா ஊரடங்கால் கேரளாவில் வறுமையில் வாடிய கொல்லிமலை தொழிலாளர்கள், 110 கிமீ தூரம் நடந்தே தமிழகம் வந்து சேர்ந்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் கேரள மாநிலம், கோட்டயத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் வேலையின்றி மிகுந்த சிரமத்தில் இருந்தனர்.  கையில் இருந்த பணமும் செலவழிந்ததால் பசியால் வாடினர். எனவே சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவு செய்தனர்.
போக்குவரத்து வசதி இல்லாததால், கேரளாவில் இருந்து நடந்தே புறப்பட்டனர். கடந்த 3 நாட்களாக சுமார் 100 கிமீ தூரம் நடந்தே வந்தனர்.

இடையில் லாரி ஒன்றில் இடம் கிடைக்க கேரள மாநிலம், நெடுங்கண்டம் வந்தனர். அங்கிருந்து குதிரைப்பாஞ்சான் வழியாக 10 கிமீ தூரம், யானைகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த காட்டுப்பாதையில் நடந்து தேனி மாவட்டம், தேவாரம் வந்து சேர்ந்தனர். தேவாரம் காவல்நிலையம் அருகே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு, நடந்து செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறி தேவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த தகவல் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கூறப்பட்டது. அவர்களுக்கு கொராேனா பாதிப்பு உள்ளதா என மருத்துவ குழுவினர் சோதனை செய்தபின் வேன் ஒன்றில் கொல்லிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Tamil Nadu ,forest ,Corona Uraltangal Kerala ,forests ,curfew workers ,Trip , Corona, Curfew, Kerala, Tamil Nadu, Workers
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...