×

பெங்களூரை அதிரவைத்த சத்தம்: வளி மண்டலத்தில் ஏற்பட்ட வெடிப்பா?

* இந்த பயங்கர சத்தம் எச்ஏஎல், ஒயிட்பீல்டு, சர்ஜாபுரா, இந்திராநகர், ஹெப்பகோடி, கோரமங்களா, விவேக்நகர்,  காக்ஸ்டவுன், ஹெப்பாள், ஜெயநகர், ஜே.பிநகர், கே.ஆர்புரம், அத்திபள்ளி, ஆனேக்கல் மற்றும் தமிழக எல்லையான ஒசூர் வரை 3 நொடிகள் கேட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தம் மக்களை அச்சத்தில்   ஆழ்த்தியது. இது பூகம்பம் இல்லை என்று தேசிய பேரிடர் மையம் விளக்கமளித்துள்ள   நிலையில், வானிலை மாற்றத்தால்  ஏற்பட்ட வெடிப்பா என்ற சந்தேகமும்  எழுந்துள்ளது. பெங்களூருவில்  வடக்கு பகுதியில் நேற்று  பிற்பகல்  அதிரவைக்கும் வகையில் பயங்கர சத்தம் கேட்டது. இந்த பயங்கர சத்தம் எச்ஏஎல்,  ஒயிட்பீல்டு,  சர்ஜாபுரா, இந்திராநகர், ஹெப்பகோடி, கோரமங்களா, விவேக்நகர்,  காக்ஸ்டவுன்,  ஹெப்பாள், ஜெயநகர், ஜே.பிநகர், கே.ஆர்புரம், அத்திபள்ளி,  ஆனேக்கல் மற்றும்  தமிழக எல்லையான ஒசூர் வரை 3 நொடிகள் கேட்டுள்ளது.

இந்த   பேரொலியால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்துள்ளது, சாலையில் வாகனங்களில் ெசன்றவர்கள் குலுங்குவது போன்று உணர்ந்துள்ளனர். பூகம்பம் வந்துவிட்டதாக கருதி மக்கள் வீட்டை விட்டு   பதட்டத்துடன் வெளியே ஓடி வந்துள்ளனர்.   இந்த சம்பவம்  குறித்து  கர்நாடகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மையத்திற்கு தகவல்  கிடைத்தது.  அவர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ள நில அதிர்வை கண்டறியும்,  கருவிகளை ஆய்வு  செய்தனர். அதில் ரிக்டர் அளவு பதிவாகவில்லை. எனவே, இந்த  சத்தம் பூகம்ப  நிகழ்வுக்கான அறிகுறி இல்லை என்று விளக்கமளித்தனர்.

இதற்கிடையே,    எச்ஏஎல் விமான நிலையத்தில் மீரஜ் 2000 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு   வருவதால் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் தரப்பில்   சந்தேகிக்கப்பட்டது. உடனே பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்  தலைமையிலான அதிகாரிகள், சத்தம் கேட்ட அனைத்து இடத்திற்கும் சென்று விசாரணை  நடத்தினர்.  மேலும், எச்ஏஎல் விமானநிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தகவல்  கேட்டனர். ஆனால், விமான விபத்தும் அல்ல என்று உறுதி  செய்யப்பட்டது.  இந்த  திடீர்  சத்தம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று   அனைவருக்கும் புரியாத  புதிராக இருந்தது.

இது குறித்து கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை  மையத்தின் உயரதிகாரி ஜெகதீஷ் கூறுகையில், ‘‘பெங்களூருவில்  திடீரென்று  ஏற்பட்ட பயங்கர  சத்தம் குறித்து அரசு அதிகாரிகள், மாவட்ட  நிர்வாக  அதிகாரிகள் தரப்பில்  எந்தவிதமான உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.   இந்த  சத்தம் பூகம்பத்துடன் தொடர்புடையது அல்ல. ஆனால், வளிமண்டலத்தில் நிகழும்   தட்பவெப்ப மாற்றத்தால் சத்தம்  ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  புயல்   உருவாகியுள்ள நிலையில், வளிமண்டலத்தில் உள்ள அனல் காற்று, சாதாரண காற்றுடன்   மோதும்போது, இதுபோன்று சத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வுகளை   கண்காணிக்க எந்தவிதமான கருவிகளும் இல்லை. இந்த ஏர்பிளாஸ்டால், எந்தவிதமான   பாதிப்பும் ஏற்படாது. எனவே, மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை,’’ என்றார்.

Tags : Bengaluru ,Atmosphere Bangalore ,Noise: Explosion , Bangalore, noise, atmosphere
× RELATED பெங்களூருவில் 7 நாள் முழு ஊரடங்கு