×

மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரை கடந்தது: 165 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி

* வீடுகள் தரைமட்டம்; 2 பேர் பலி

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான அம்பன் சூப்பர் சூறாவளி புயல் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நேற்று மாலை கரையை கடந்தது. மேற்கு வங்கம், ஒடிசாவின் கடலோர பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 165 கிமீ வரை வீசிய புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் தரைமட்டமாகின. இந்த புயலால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் தலா 2 பேர் பலியாகினர். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனால், 250 கிமீ வேகத்தில் புயல் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென வலுவிழந்து சூப்பர் சூறாவளியாக மாறியது.

இது ஒடிசா கடலோரம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் வழியாக நேற்று மாலை கரையை கடக்கும் கணிக்கப்பட்டது. இதனால், இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்த 5 லட்சம் பேரும், ஒடிசாவில் கடலோர பகுதிகளை சேர்ந்த 2 லட்சம் பேரும் தற்காலிக முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்பு பணிகளுக்காக இரு மாநிலங்களிலும் 41 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிலை நிறுத்தப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமானம் நிலையம் மூடப்பட்டது. கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை
மீட்டு வருவதற்கான சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹவுராவில் இருந்து இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. கொல்கத்தாவில் அனைத்து மேம்பாலங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் திகா பகுதியிலிருந்து வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே சுந்தரவனக் காடுகளை ஒட்டி நேற்று மதியம் 2.30 மணிக்கு அம்பன் சூறாவளி கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் வால்பகுதி மேகங்கள் ஒடிசாவின் பிரதிப் பகுதியை தொட்டபடி நகர்ந்தன.

இதனால் பிரதிப், பாத்ரக், பாலாசோர் கடலோர பகுதிகளில் 160 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசை வீடுகள் தரைமட்டமாகின. மின்கம்பங்கள் சாய்ந்து, மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.  மேற்கு வங்கத்தில் மாலை 4 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய அம்பன் புயலால், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் 165 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் அலைகள் 4-5 மீட்டர் உயரத்திற்கு எழுப்பின. சுமார் 5 மணி நேரம், அதாவது இரவு 7 மணி அளவில் புயல் கரையை அடைந்தது.

மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே அது கரையை கடந்து வலுவிழந்தது. புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, கிழக்கு பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று காலை வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் அம்பன் புயலால் நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்தன. மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. பாத்ரக், கேந்திரபாரா மாவட்டத்தில் 2 பேர் புயலுக்கு பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவை பொறுத்த வரையில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், மேற்கு வங்கத்திலும் 2 பெண்கள் பலியாகினர்.

முடங்கிய கொல்கத்தா
வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் புயலால் மரங்கள் சாய்ந்ததில் சுமார் 5,200 வீடுகள் சேதமடைந்தன. கொல்கத்தாவில் சாலைகளில் ஆங்காங்கே மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பல பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே முடங்கி உள்ளன. கொரோனா பாதிப்பு சமயத்தில் நோயாளிகளை மருத்துவமனை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : West Bengal ,Bangladesh ,Hurricane Katrina Hurricane Amban , West Bengal, Bangladesh, Amban Storm, Cyclone
× RELATED மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம்...