×

மனிதநேயத்தையும் கொன்றதோ கொரோனா?... தாய், மகள் ஊரைவிட்டு விரட்டியடிப்பு

* மோட்டார் அறையில் தங்க வைத்த கொடூரம்
* எறும்புகள் ஊறிய உணவை உண்ட பரிதாபம்

பணகுடி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மும்பை தாராவியில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், சொந்த ஊருக்கு திரும்பத் துவங்கியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கடந்த 10 நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
தாராவியில் வசித்த தாயும், மகளும் கடந்த 14ம் தேதி தனியார் பஸ்சில் நபருக்கு ரூ.7,500 கட்டணம் கொடுத்து சொந்த ஊர் வந்துள்ளனர். தாய் உடல் நிலை சரியில்லாதவர்.

மகள் எம்பிஏ பட்டதாரி. தந்தை அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணமாகாத மகளும் அவருடன் சொந்த ஊர் திரும்பி விட்டார். கடந்த 16ம் தேதி இவர்கள் நெல்லை மாவட்டம் வந்தனர். அவர்களுக்கு கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையை முடித்து வடக்கன்குளம் பகுதியில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கும் ெதாற்று பரவி விடும் என்ற அச்சத்தில், மும்பையில் இருந்து திரும்பிய தாயும், மகளும் தெருவிற்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

தெருவின் குறுக்கே பைக், சைக்கிள் ஆகியவற்றை நிறுத்தி வீட்டிற்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அப்பகுதி மக்கள், அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து தாயும், மகளும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். இதனால் மும்பையில் உள்ள தங்கள் உறவினருக்கு செல்போன் மூலம் இளம்பெண் பேசினார். அப்போது ஊரின் அருகே உள்ள அவரது தோட்டத்தில் மோட்டார் வைத்திருக்கும் அறையில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். இதனால் பழைய மோட்டார் அறையை சுத்தம் செய்து விட்டு 2 நாட்கள் தங்கியுள்ளனர்.

ஆனால் தோட்டம் என்பதால் எறும்பு, தவளை உள்ளிட்ட பூச்சிகளுடன் 2 நாட்கள் தங்கிய நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு வைத்திருந்த சாப்பாட்டில் எறும்புகள் ஊறின. இருப்பினும் பசி காரணமாக அந்த சாப்பாட்டையே சாப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து இளம்பெண் கண்ணீர் மல்க கூறுகையில், ‘‘நாங்கள் மருத்துவர்கள் சொல்லி அனுப்பியவாறு எங்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்தி கொள்ளக்கூட எங்களுக்கு உரிமை இல்லை எனக்கூறி தெருவைச் சேர்ந்தவர்கள் விரட்டியடித்தனர். எனது தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதை, ஊர் மக்களிடம் எடுத்துக் கூறியும் எங்களை வீட்டிற்குள் விடவில்லை.

தற்போது எங்களுக்கு கொரோனா சோதனையில் தொற்று இல்லை என வந்ததையடுத்து பணகுடி போலீசார் உதவியுடனே நேற்று எங்கள் வீட்டிற்குள் செல்ல முடிந்தது’’ என்றார். இதேபோல பழவூர் பகுதியில், மும்பையில் இருந்து வந்தவர்களை அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற தொடர் சம்பவங்களால் மனிதநேயம் மரித்துப் போனதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை மனிதாபிமானத்துடன் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Corona ,humanity , Humanities, corona, repulsion
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...