×

கொரோனா ஊரடங்கு காலத்தில்; அரசு வழங்கும் கூடுதல் ரேஷன் அரிசி கடத்தல்: மார்த்தாண்டத்தில் பரபரப்பு

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் உடையார்விளை, காப்புக்காடு, கோணம் உள்ளிட்ட இடங்களில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்கள் உள்ளன. ரேஷன் கடைகளுக்கு இங்கிருந்து உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. குடோன்களில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை கம்பியால் குத்தி அரிசி எடுக்கப்படுவதாகவும், இதனால் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் மூட்டைகளில் அரிசி அளவு குறைவாக இருப்பதாகவும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்தநிலையில் மூட்டைகளில் இருந்து சிறிது சிறிதாக சேகரிக்கப்படும் அரிசியை மூட்டைகளாக கட்டி குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கென்றே ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான புேராக்கர்கள் உள்ளனர். இந்த முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை அவ்வப்போது வாகன சோதனைகள் நடத்தி கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய ரேஷன் கார்டு உள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டரை கிலோ, ஐந்து கிலோ என கூடுதலாக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் அரிசி சில கடைகளில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூடுதல் அரிசி மூட்டைகள் வருவதால் மூட்டைகளில் துளையிட்டு திருடும் கும்பல் உற்சாகமடைந்துள்ளது.

இப்போது அதிக அரிசியை திருடி வெளி மார்க்கெட்டில் விற்று வருகின்றனர். நேற்று காப்புக்காடு குடோனில் இருந்த மார்த்தாண்டம் கன்னக்கோடு ரேஷன் கடைக்கு அரிசி லோடு கொண்டு செல்லப்பட்டது. லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை ரேஷன் கடைக்குள் இறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது இந்த மூட்டைகளுக்கு இடையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் ஏராளமாக இருந்தன. கட்டி வைக்கப்பட்ட மூட்டைகளை டெம்போவிலும், அரசு முத்திரையிடப்பட்ட மூட்டைகளை ரேஷன் கடைக்குள்ளும் இறக்கிக்கொண்டிருந்தனர். இதை அந்த பகுதியில் சென்ற சிலர் கவனித்து லோடு இறக்கிக்கொண்டிருந்த ஊழியர்களிடம் கேட்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறப்போவதாக பொது மக்கள் கூறினர். உடனடியாக ஊழியர்கள் வேகவேகமாக ரேஷன் கடைக்கு வேண்டிய அரிசி மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு வேகமாக சென்றுவிட்டனர். இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Government ,Corona Curfew , Corona curfew, government, ration rice, smuggling
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...