×

புதுகையில் டாஸ்மாக்கில் மது வாங்க முயன்றபோது கும்பல் சிக்கியது; தமிழகம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம்?... ரூ70 லட்சம் பறிமுதலானது எப்படி ; பரபரப்பு தகவல்

திருமயம்: திருமயம் அருகே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கும்பலுக்கு தமிழகம் முழுவதும் நெட்வொர்க் உள்ளதா, அவர்கள் எந்தந்த மாவட்டங்களில் இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் புதிய கோர்ட் கட்டிடத்தின் பின்புறம் வாரியப்பட்டி செல்லும் சாலையோரம் உள்ள மூங்கித்தாம்பட்டி டாஸ்மாக் கடையில் கடந்த 16ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மது வாங்க முயன்றார். சந்தேகமடைந்த விற்பனையாளர் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் புகார் செய்தார்.

போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது திருமயம் அடுத்த கீழதுர்வாசபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (33) என தெரியவந்தது. அவருடன் வந்த அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (30), திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது இப்ராகிம்(27), திருமயம் கமாராஜர் சாலை பகுதியை சேர்ந்த முகமது நசுரூதீன் ஆகியோரை மடக்கி பிடித்து பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் மேற்பார்வையில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் எஸ்ஐக்கள் அன்பழகன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை கடந்த 3 நாட்களாக அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரனை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் அப்பலமானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் சந்தோஷ்குமார் பணியாற்றியபோது வில்லிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (48), நாகர்கோயில் மணிகண்டன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மணிகண்டன் சொந்த ஊருக்கு சென்று அங்கு 10, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளை தனது லேப்டாப்பில் ஸ்கேன் செய்து, ஒரு லட்சம் மதிப்பில் கள்ள ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் போட்டு சுரேசிடம் கொடுத்துள்ளார். அதற்காக ரூ10 ஆயிரம் கமிஷன் தொகை பெற்றுள்ளார். பின்னர் சுரேஷ் தனது நண்பர் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு கள்ள நோட்டு விவகாரம் பற்றி தெரிவித்துள்ளார்.

தற்போது டாஸ்மாக் கூட்டம் அதிகமாக இருப்பதால் கள்ள நோட்டுகளை எளிதில் மாற்றிவிடலாம் என சந்தோஷ்குமாருக்கு, சுரேஷ் யோசனை கூறியுள்ளார். சந்தோஷ்குமார் 15 எண்ணிக்கை கொண்ட 200 ரூபாய் கள்ள நோட்டுக்களை பெற்றுக்கொண்டு திருமயம் வந்துள்ளார். அங்கு தனது சகோதரர் ராமச்சந்திரன், திருமயத்தைச் சேர்ந்த நண்பர்கள் முகமது இப்ராகிம், முகமது நசுருதீன் ஆகியோருடன் சேர்ந்து டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மாற்ற முயன்ற போது சிக்கி கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சுரேஷ் மற்றும் மணிகண்டனும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது சுரேசிடம் இருந்து ரூ49 ஆயிரத்து 990 மதிப்பிலான கள்ள நோட்டுகளும், மணிகண்டனிடம் இருந்து ரூ64 லட்சத்து 91 ஆயிரத்து 540 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் அச்சடிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் மெஷின், லேப்டாப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது என்றனர். இது தொடர்பாக 6 பேரையும் திருமயம் போலீசார் கைது செய்து திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த கும்பலுக்கு தமிழகம் முழுவதும் நெட்வொர்க் உள்ளதா? யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? வேறு எந்தந்த மாவட்டங்களில் இதுவரை எவ்வளவு மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டனர் என 6 பேரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சைடிஸ், பெட்ரோலுக்கும் கள்ள நோட்டு
சந்தோஷ்குமார் கும்பல் டாஸ்மாக் கடைக்கு செல்வதற்கு முன் மது குடிக்க சைடிஷ் வாங்க திருமயத்தில் உள்ள ஒரு பெட்டி கடையில் ₹200 கள்ளநோட்டை கொடுத்து கூல்டிரிங்ஸ், நொறுக்கு தீனிகள் வாங்கியுள்ளனர். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிலும் அவர்கள் வந்த ஆட்டோவுக்கு பெட்ரோல் நிரப்பியது விசாரணையில் தெரியவந்தது.

Tags : gang ,Tamil Nadu ,Pushover , Tamil, counterfeit, circulation
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...