×

கொடைக்கானலில் பரபரப்பு; ரூ.ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சா செடி அழிப்பு: 2 பேர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை போலீசார் தீ வைத்து எரித்து அழித்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் சில தினங்களுக்கு முன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா கடத்தி வந்த கொடைக்கானலை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் கொடைக்கானலில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும், கொடைக்கானல் வனச்சரக பகுதியான தூண்பாறை பின்புறம் உள்ள பகுதியில் கஞ்சா பயிர்களை வளர்த்து அறுவடை செய்து எடுத்து வந்ததும் தெரிந்தது.

இது குறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் வனத்துறை ரேஞ்சர்கள் ஆனந்தகுமார், பழனிகுமார் ஆகியோர் நேற்று மாலை தூண் பாறை பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு சுமார் ஒரு ஏக்கர் அளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கஞ்சா செடிகளை போலீசாரும், வனத்துறையினரும் தீ வைத்து அழித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.ஒரு கோடி என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து, வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட கொடைக்கானல் வில்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல்(50), மன்னவனூர் கும்பூர் வயலைச் சேர்ந்த பிரசாந்த்(35) ஆகிய 2 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி மற்றும் வீரமணி ஆகியோரை போலீசார் தேடுகின்றனர். இச்சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Kodaikanal , Kodaikanal, marijuana, vandalism, arrest
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்