×

பெங்களூருவில் காதை கிழிக்கும் அளவில் மர்ம ஒலி : பூகம்பமும் இல்லை; விமானங்களும் பறக்கவில்லை.. வான்வழி மூலம் ஏற்பட்ட சத்தமா?

பெங்களுரு : பெங்களூருவில் காதை கிழிக்கும் அளவில் மர்ம ஒலியை உணர்ந்த பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் இன்று மதியம் சுமார் 1 மணி 20 நிமிடத்தின் போது, சப்தம் டமால் என்ற ஒலியுடன் வெளிப்பட்டது. ஒரே நேரத்தில், பெங்களுருவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஒலி உணரப்பட்டது. கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி என சம்பந்தமே இல்லாத தொலைதூர பகுதிகளிலுள்ள மக்களும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர்.

பூகம்பமும் இல்லை; விமானங்களும் பறக்கவில்லை

இதை தொடர்ந்து உடனடியாக பத்திரிகையாளர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவை தொடர்பு கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். போர்விமானங்கள் பறக்கும் போது இது போன்ற சத்தம் கேட்கும். ஆனால் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என்றும் பெங்களூரில் உள்ள எச்ஏஎல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதே போன்று, மாநிலத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரிகள், பெங்களூரு நகரில் பூகம்பம் ஏற்படவில்லை என்றும் எனவே இந்த சத்தத்திற்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர்.

 வான்வழி மூலம் ஏற்பட்ட சத்தமா?

இதனிடையே சத்தம் குறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தில் விஞ்ஞான அதிகாரியாக இருக்கும் ஜகதீஷ் கூறுகையில், இந்த ஒலி எந்த நில அதிர்வு அசைவுகளாலும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். நில அதிர்வு காரணத்தினால் இந்த சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்படவில்லை என்றால், வான்வழி இயக்கம் மட்டுமே ஒரே சாத்தியமாக இருக்கக் கூடும் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலும் இதே சத்தம்

பெங்களூரில் ஏற்பட்ட அமானுஷ்யமான சத்தத்தை போல் வேறு எங்கையும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதா என்று ஆராய்ந்தபோது, இதேபோன்ற சத்தம் ஆஸ்திரேலியாவின், கான்பெர்ரா வடக்கில் உள்ள பெல்கொன்னென் மற்றும் குங்காஹ்லின் ஆகிய இடங்களில் இன்று கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களுருவை மிரட்டிய மர்ம சத்தம் குறித்து நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Tags : earthquake ,Bengaluru , Bengaluru, Mystery Sound, Earthquake, Planes, Not Fly, Aerial
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்