×

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கொழும்பு - தூத்துக்குடி இடையே ஜூன் 1-ல் சிறப்பு கப்பல் இயக்கம்

தூத்துக்குடி: கொரோனா ஊரடங்கால் இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் ஜூன் 1-ம் தேதி சிறப்பு கப்பல் இயக்கப்படுகிறது. இந்த கடற்படை கப்பலில் 700 பேர் தூத்துக்குடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களையும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுற்றுலா, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கை சென்று, ஊரடங்கால் சிக்கியுள்ள 1200 பேர் இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து, மத்திய அரசு அறிவித்த இணையதளத்தில் பதிவு செய்தனர். அவர்களை தாயகம் அழைத்து வர இம்மாத இறுதியில் கொழும்பில் இருந்து மும்பை மற்றும் பெங்களூருக்கு இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கொழும்பு- தூத்துக்குடி இடையே வரும் ஜூன் 1-ம் தேதி சிறப்பு கப்பல் இயக்கப்படுகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் 700 பேர் அழைத்துவரப்படுகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. மாலத்தீவில் சிக்கிய 658 இந்தியர்களை அழைத்து கொண்டு, நேற்று முன்தினம் கொச்சி துறைமுகம் வந்துள்ளது. தற்போது கொச்சியில் இருக்கும் இக்கப்பல் கொழும்பு சென்று அங்கிருந்து இந்தியர்களை ஏற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த கப்பல் ஜூன் 2-ம் தேதி தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கப்பலில் வரும் 700 பேருக்கும் குடியுரிமை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்ய துறைமுகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி- கொழும்பு இடையே ஏற்கனவே பயணிகள் கப்பல் இயக்கப்பட்ட போது, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் செயல்பட்ட பயணிகள் முனையத்தில் குடியுரிமை சோதனை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கப்பலில் வருவோர் உடனடியாக சிறப்பு பேருந்துகள் மூலம் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்தந்த மாநிலங்களில் தான் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இந்த கப்பலில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Colombo ,Tuticorin , Sri Lanka, Indians, Colombo, Tuticorin Special Ship
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...