×

ஊரடங்கு உத்தரவால் நார், ஓலைப்பெட்டி தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் கவலை

காரியாபட்டி: கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே நசிவில் இருக்கும் நார் மற்றும் ஓலைப்பெட்டி தொழில், மேலும் அழிவை நோக்கி சென்றிருப்பதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர். நார் மற்றும் ஓலை பெட்டிகளுக்கான பயன்பாடும், மவுசும் அக்காலத்தில் அதிகம். இப்பெட்டிகளில் வைக்கப்படும் உணவு மற்றும் தானியப்பொருள்கள் கெடாமல் பாதுகாப்பாக இருந்தன. விவசாயிகள் வயல்களில் விதைக்க தானியங்களை நார், ஓலை பெட்டிகளிலேயே கொண்டு செல்வர். தென் மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. இப்பகுதிகளில் பனை ஓலைகளில் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறை பெட்டி, மிட்டாய்பெட்டி, விசிறி, முறம் என விதம்விதமான கைவினைப்பொருட்கள் செய்யப்பட்டு வந்தன. இதை குடிசைத்தொழிலாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் செய்து வந்தன. பிளாஸ்டிக் பொருட்கள் வருகையால் ஓலை பெட்டி ஓரங்கட்டப்பட்டது. புதிய வரவுகளால் ஏற்கனவே நைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா  ஊரடங்கால் நார், ஓலைப்பெட்டி தொழில் மேலும் முடங்கி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னகாரியாபட்டி மற்றும் பாப்பனம், குரண்டி, சிவலிங்கபுரம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நார், ஓலைப்பெட்டி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. மழை இல்லாமல் பனைமரங்கள் பட்டு போய் விட்டன. அரசு நடத்தும் மகளிர் குழு உருவாக்கிய பொருள்கள் கண்காட்சியில் இப்போது இந்த ஓலை பெட்டிகள் காட்சி பொருளாகத்தான் உள்ளது. இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமலும், குடும்பம் நடத்த வழியும் தெரியாமலும் தொழிலாளர்கள் காலத்தை கடத்தி வந்தனர். இதற்கிடையில், இப்போது கொரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இத்தொழில் முழுமையாக அழிவின் உச்சம் தொட்டிருக்கிறது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘ஓலை பெட்டி தயாரிப்பு தொழிலுக்கு காரியாபட்டி பகுதி பெயர் பெற்றதாகும்.

கிராமங்களில் இருந்து பனை ஓலைகள், ஓலை மட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து தொழில் செய்தோம். இதில் கிடைத்த வருமானத்தில்தான் பிள்ளைகளை வளர்த்தோம். தற்பொது கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளியேறி போக முடியாமல், இந்த தொழில் முழுமையாக முடங்கிவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பார்த்து வந்த இந்த தொழிலை, குறைந்தளவு குடும்பங்களே செய்யும் அளவிற்கு சரிந்து விட்டது. மதுரை பூ மார்க்கெட்டுக்கு நார், ஓலை பெட்டிகள் வாங்கி செல்வர். தற்போது உள்ள நிலையில் கடைகள் இல்லாததால் இதுபோன்ற தேவைக்கான எந்த விற்பனையும் இல்லை. நாங்கள் பிழைக்க வழியில்லை’’ என்றனர். இத்தொழிலை பாதுகாக்கவும், ஊரடங்கால் பாதித்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Curfew imposed , fiber , tile industry,Workers' concern
× RELATED கோவை மாநகராட்சியை விபத்தில்லா...