×

விலங்குகளையும் கொரோனா தாக்கும் அபாயம் திருச்செந்தூர் கோயில் யானைக்கு நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் உணவு

திருச்செந்தூர்: உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. வன விலங்குகளையும் கொரோனா தாக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகி வருகிறது. இதையடுத்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் வளர்க்கப்பட்டு வரும் யானைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானைக்கு தினமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்துமிக்க உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தினமும் காலை கோத்தாரி புல், மாலையில் தர்ப்பூசணி, செவ்வாழை, கீரை வகைகள் உணவாக கொடுக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெல்லை கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், ‘‘மனிதர்களை தாக்கும் கொரோனா வைரசில்  இருந்து, விலங்குகளை தாக்கும் கொரோனா வைரஸ் முற்றிலும் வேறுபட்டதாகும்.  நாய்களை கெனைன் கொரோனா வைரஸ் தாக்கியது தெரிய வந்துள்ளது. கொரோனா நோய் தாக்குதல் உலகமெங்கும் இருப்பினும், யானைகளை அந்நோய் தாக்கியதாக இதுவரை தகவல் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புலிகளையே கொரோனா வைரஸ் தாக்கும்போது யானையை இந்நோய் தாக்காது என்று உறுதியாகவும் கூற முடியாது. எனினும் கோடை காலங்களில் யானைக்கு சத்தான உணவுகள் மிக அவசியம். தினசரி நடைபயிற்சி, சத்தான உணவுகள் ஆகியவை கொரோனா உள்ளிட்ட எத்தகைய வைரஸ் நோயில் இருந்தும் யானைகளை பாதுகாக்க உதவும்’’ என்றனர்.

Tags : Thiruchendur , Thiruchendur temple, elephant's ,immune system ,risk of attacking animals, corona
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...